ஆன்மிகம்

பாவங்கள் போக்கும் பவானி சங்கமேஸ்வரர்

Published On 2019-05-01 05:23 GMT   |   Update On 2019-05-01 05:23 GMT
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை.
காவிரியும், பவானியும் கண்ணுக்கு தெரியாத அமுத நதியும் கூடும் பவானி கூடுதுறையில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை சங்கமேஸ்வரர் என்றும், தேவியை வேதநாயகி என்றும் அழைக்கிறார்கள். 2 ஆறுகளுக்கிடையே தீபகற்பமாக இருக்கும் பவானி நகரம்தான் ஈரோடு மாவட்டத்திலேயே மிகப்பழமையான நகரம் ஆகும். ஆங்கிலேய காலத்தில் ஈரோடு மாவட்டப்பகுதிகளை நிர்வாகம் செய்த ஆங்கிலேயே கலெக்டர்கள் பவானியிலேயே தங்கி இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருந்த மாளிகைகள் இன்றும் பவானி கோவில் அருகே உள்ளன.

அதுபோல் முதன்முதலாக போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டதும் பவானியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பவானியில் உற்பத்தி செய்யப்படும் பவானி ஜமுக்காளம் உலகத்தரம் வாய்ந்தது. இங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் ஜமுக்காளங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை.

சங்கமேஸ்வரர் கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பல்லவர் கால சிற்பங்களும், பாண்டியர் தொடர்பான குறிப்புகள், சோழர் கால பட்டயங்களும் உள்ளன. கோவில் திருப்பணிகள் நடைபெற்றதால் பல கல்வெட்டுகள் மறைந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோவில் வசந்த மண்டபத்தின் நடுவில் தாமரை மலர் சிற்பம் உள்ளது. அதனை சுற்றி பெண்கள் நாட்டியம் ஆடும் காட்சியும், சிவபெருமான் தாண்டவ கோலத்தில் காளியுடன் நடனம் ஆடும் காட்சியும் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளன. அதுபோல் பிரம்மன், திருமால், முருகன் தும்புரு ஆகியோர் இசைக்கருவிகளை வாசிப்பதுபோன்ற காட்சிகளும் உள்ளன.

தூண்களில் சிவபெருமானின் பல்வேறு தோற்றங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. இங்கு அம்மன் ஆராட்டு கட்டில் 1804-ம் ஆண்டு கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் வில்லியம் கேரோ வழங்கியதாகும்.

பழமை குன்றாமல் புதுப்பொலிவு பெற்றுவரும் பவானி நகரில் செல்லியாண்டி அம்மன் உள்பட பல்வேறு சிறப்பு பெற்ற வேறு கோவில்களும் உள்ளன.
Tags:    

Similar News