ஆன்மிகம்

ஜோதிடம் குறிப்பிடும் ‘அவயோக தோஷம்’ - பரிகாரம்

Published On 2019-03-01 07:32 GMT   |   Update On 2019-03-01 07:32 GMT
ஒருவர் முற்பிறவியில் பல பேர்களை ஏமாற்றியிருந்தால் இந்த பிறவியில் அவர் ஏமாறும் நபராக பிறந்திருப்பார். ஜோதிட ரீதியாக இதை "அவயோக தோஷம்" என்று குறிப்பிடுவார்கள்.
வாழ்க்கையில் ஏமாறுபவர் இருக்கும் வரையில், ஏமாற்றுபவரும் இருப்பார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். யார் ஏமாறுகிறார்..? யார் ஏமாற்றுகிறார்..? என்ற விஷயத்தை ஜோதிட சாஸ்திர ரீதியாக எளிமையாக விளக்க முடியும். அதாவது, ஒருவர் முற்பிறவியில் பல பேர்களை ஏமாற்றியிருந்தால் இந்த பிறவியில் அவர் ஏமாறும் நபராக பிறந்திருப்பார்.

ஜோதிட ரீதியாக இதை "அவயோக தோஷம்" என்று குறிப்பிடுவார்கள். ஏமாறுவது அல்லது ஏமாற்றுவது என்பது பொதுவாக பணத்திற்காக, கவுரவத்திற்காக, தொழிலுக்காக, காதலுக்காக, நட்பிற்காக, அன்பிற்காக என்று பல்வேறு விதங்களில் இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் புதன், சனிக்கு உள்ள சம்பந்தமே ஏமாறுபவர் யார்..? ஏமாற்றுபவர் யார்..? என்ற நிலையை விளக்கமாக தெரிவிக்கும்.

புதன் என்றால் புத்தியை குறிக்கும். ஒரு மனிதனின் அறிவிற்கும், ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான இவரை வித்யாகாரகன் என்பார்கள். புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள். அதனால்தான் நம் முன்னோர்கள் ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்ற பழமொழியை சொல்லி வைத்தார்கள். இதன் பொருள் பணம், பொருள் எளிதாக கிடைத்தாலும் புத்தி என்னும் அறிவுச் செல்வம் கிடைக்காது என்பதாகும். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் கண்டுபிடிக்க போகும் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் புதன்தான் காரணகர்த்தா ஆவார்.

வலுப்பெற்ற நிலையில் சுய ஜாதகத்தில் புதன் அமர்ந்திருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் அறிவின் துணை கொண்டு வாழ்க்கையில் முன்னேறி விடுவது உறுதி. பாவ கிரகங்களுடன் சேராமல் புதன் தனித்து ஒரு ஜாதகத்தில் இருந்தால் விசேஷ தன்மை பெற்ற சுப கிரகமாக செயல்படும். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும், அதன் பார்வைக்கும் குருவிற்கு நிகரான சக்தி உண்டு. அதே சமயம், புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம். அதாவது, தன்னுடன் சேர்ந்த கிரகத்திற்கு ஏற்ப தனது இயற்கை தன்மைக்கு எதிரான அசுப பலனையும் தரும்.

சனி கர்மகாரகன், ஆயுள்காரகன், மந்தன், காரி என்ற பெயர்களை கொண்டவர். ஒருவரின் கர்ம வினைக்கு ஏற்ப சுப, அசுப பலன்களை சரியாக அளிப்பதில் வல்லவர். அதனால்தான் தராசை குறிப்பிடும் துலாம் ராசியில் சனி உச்சம் அடைகிறார். கர்ம வினையின் அதிகாரியான சனி ஒருவரது ஜாதகத்தில் பெற்ற வலிமை அவரது பூர்வ ஜென்ம பலனை வெளிக்காட்டுவதாக இருக்கும். பாக்கிய ஸ்தானம் என்ற ஒன்பதாம் இடம் வலுப்பெற்றவர்கள் ஜாதகத்தில் சனி வலிமையாக செயல்படுவார். சனி கொடுக்க எவர் தடுப்பார்..? என்பது அவரது வலிமையை காட்டும் ஜோதிட வழக்கு ஆகும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் சனி வலிமை பெற்றிருந்தால், அவரது தசா காலத்தில் அமர்ந்த இடத்திற்கு ஏற்ப ஏராளமான நற்பலன்களை வாரி வழங்குவார். உயர் பதவி, தொழில், அந்தஸ்து என எட்டாத உயரத்தில் ஏற்றி விடுவார். வலிமை இழந்தவர்களுக்கு நீசத் தொழில், வறுமை, சிறை தண்டனை கொடுத்து பாவ, புண்ணியங்களை உணர்த்தி வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுப்பார்.

ஒரு ஜாதகத்தில் சனி அமர்ந்த இடத்தை வைத்தே பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய பலனை கூறிவிடலாம். மேலும், சனி ஒளியற்ற கிரகம் என்பதால் தன்னுடன் இணைந்த கிரக ஒளியின் தன்மைக்கேற்ப நன்மை, தீமைகள் அமையும். புத்தியை வெளிக்காட்டும் புதன் கிரகம், மந்தன் என்ற சனி கிரகத்துடன் கேந்திரம், திரிகோணம், பார்வை என எந்த வழியில் சம்பந்தம் பெற்றாலும் புத்தியில் தடுமாற்றம் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தம் இருந்தால் அவர் ஏமாற்றுபவர், ஏமாந்து போனவர் அல்லது இனிமேல் ஏமாற்றப்படுவார் என்று கூறலாம்.

ஜாதக ரீதியாக ஏமாற்றுபவர்

ஒருவரது சுய ஜாதகத்தில் புதன் வலிமை பெற்று, சனி வலிமை குறைந்திருந்தால் அவர் பிறரை ஏமாற்றுபவர் ஆவார். அதாவது, புதன் பெற்ற வலிமை காரணமாக, தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, சனி வலிமை குறைந்தவர்களை ஏமாற்றி விடுவார்கள். அந்த அமைப்பு, அதிகமாக இலவச சலுகைகளை கொடுப்பவர்கள், முதலீட்டை இரட்டிப்பாக மாற்றி தருவதாக கூறுபவர்கள், போலி பத்திரம் தயாரித்து வீட்டு மனை விற்பவர்கள், ஆவண முறைகேடு செய்பவர்கள், பொய் கணக்கு கூறுபவர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் அமைந்திருக்கும்.

புதன், சனியுடன் சர்ப்ப கிரகமான ராகுவும் சம்பந்தம் பெறுபவர்கள் லாபத்திற்காக, வெற்றிக்காக சட்டத்திற்கு புறம்பான செயலை செய்ய தயங்குவதில்லை. ஏமாற்றுபவர்களுக்கு மறைவு ஸ்தானமான 6, 8, 12 ஆகிய இடங்கள் அதிக வலிமை பெற்றிருக்கும்.



ஜாதக ரீதியாக ஏமாறுபவர்

பிறப்பு ஜாதகத்தில் சனி வலிமை பெற்று, புதன் வலிமை குறைந்தவர்கள் ஏமாறுபவர் ஆவார். ஒருவருக்கு தொழில் திறமையை அளிப்பவர் சனி என்ற நிலையில் வலிமையாக அவர் அமர்ந்த ஜாதகர்கள் பெரும்பாலும் சொந்த தொழில் செய்பவர்களாகவும், பணப்புழக்கம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். குறிப்பாக, பரம்பரை தொழிலை செய்வார்கள்.

மேலும், தொழிலின் ஆழம் புரியாமல் செயல்படுவார்கள். புதனின் வலிமை குறைவாக இருப்பதால், பங்குச்சந்தை போன்றவற்றில் தவறான முதலீடு, பொருத்தமற்ற வாடிக்கையாளரை தேர்வு செய்து பெரும் முதலீட்டை இழப்பது, மூன்றாவது நபருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு அதற்கு பொறுப்பேற்று ஏமாறுவது போன்றவற்றால் பாதிப்பை அடைவார்கள்.

புதன், சனியுடன் இன்னொரு சர்ப்ப கிரகமான கேது சம்பந்தம் பெறுபவர்கள், தவறான தொழில் கூட்டாளிகளை தேர்வு செய்து, வம்பு வழக்குகளை சந்திப்பார்கள். மேலும், அன்றாட வாழ்க்கையில் சிறிய செயலுக்கு கூட அடுத்தவர்களை நம்பி இருப்பதுடன், தொடர்ச்சியான ஏமாற்றத்தையும் சந்திக்கிறார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தம் மறைவு ஸ்தானமான 6,8,12 ஆகிய இடங்களில் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட கிரக நிலையை கொண்டவர்கள் செய்தொழிலை மிக கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட சுய ஜாதக நிலை உள்ளவர்களுக்கு கோச்சார ரீதியாக புதன், சனி ஆகிய கிரகங்கள் சம்பந்தம் பெறும்போது இழப்பு அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கும். குறிப்பாக, புதன் அல்லது சனி தசை நடைபெறும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

சுருக்கமாக சொல்வதென்றால் ஜாதக ரீதியாக புதன், சனி சம்பந்தம் பெற்றவர்கள் முடிவெடுக்கும் திறன் இல்லாமல் ஏமாறுபவர்களாகவோ, ஏமாற்றுபவர்களாகவோ, ஏமாறப் போகிறவர்களாகவோ இருக்கிறார்கள். உளவியல் ரீதியாக இந்த கிரக இணைவு இருப்பவர்கள் தொடர்ந்து, ஏமாற்றத்தை சந்திப்பதால், மனச் சோர்வு அடைந்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள்.

அவயோக தோஷ பரிகாரங்கள்

புதன் வலிமை குறைந்தவர்கள் புதன்கிழமை தோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்து பச்சைப் பயிறு தானம் தர வேண்டும். உணவில் பச்சைப் பயிறு அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சனி வலிமை குறைந்தவர்கள் தவறாமல் பிரதோஷ வழிபாடு செய்து வரவேண்டும். சனிக்கிழமைகளில் எள் சாதம், எள் உருண்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வளர்பிறை ஏகாதசி நாளில் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று அவல், பொரி, பாயசம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கினாலும் மேற்கண்ட தோஷம் விலகும்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Tags:    

Similar News