ஆன்மிகம்

நோய்களை தீர்க்கும் கஞ்சமலை சித்தேசுவர சுவாமி

Published On 2018-02-09 06:32 GMT   |   Update On 2018-02-09 06:32 GMT
கஞ்சமலை சித்தேசுவர சாமி கோவிலில் இறைவனை மனதில் நினைத்து தங்கள் இன்னல்கள் நீங்கி இன்பமாய் வாழ்ந்திட மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது கஞ்சமலை சித்தேசுவர சாமி கோவில். சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அருள்பாலித்து வரும் மூலவர் சித்தேசுவர சாமி ஒரு இளம் யோகியின் உருவம். சின் முத்திரையுடன் வீராசனத்தில் (தவக்கோலத்தில்) மிகக் கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இத்தலத்து இறைவனைப் பற்றி கரபுரநாதர் புராணம் பின்வருமாறு கூறுகிறது.

மூலன்பென்றபெயர் கொண்ட அந்தணர் தன்தேகத்தை காயசித்தி (உடலை இளமையாக்குதல்) செய்து கொள்ளும்பொருட்டு நரை திரைமிக்க தன் சீடருடன் கருங்காடு வந்தடைந்தார். மூலிகை தேடிச்சென்ற மூலன் தன் சீடரிடம் சமையல் செய்யச் சொல்லி சென்றார். குருவின் ஆணைப்படி அவர் சமையல் செய்யத் தொடங்கினார். சோறு கொதித்துப்பொங்கியது. சோற்றை துலாவினார். அப்போது சோறு கறுத்து இருந்தது. இதனால் சீடர் அஞ்சினார். உடனே அவர் அந்த சோற்றை தான் உண்டுவிட்டு குருவிற்கு வேறு சோறு சமைத்து வைத்தார். அந்த சமயம் எல்லோரும் வியக்கும் வகையில் சீடரின் உடல் நரைதிரை மாறி இளமைபெற்றது.

சிறிது நேரம் கழித்து மூலிகை தேடிச் சென்ற குரு, சீடர் இருந்த இடத்திற்கு திரும்பினார். சீடரை அவரால் அடையாளம் காண இயலவில்லை. முதுமை நீங்கி இளமைபெற்ற சீடரிடமே இங்கிருந்த முதியவர் எங்கே? என்று கேட்டார். தன் குருவின் திருவடிகளில் சீடர் விழுந்து வணங்கினார். அடியேன் தான் தங்கள் சீடன் என்று கூறினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த குரு எப்படி நீ இளமைப்பெற்றாய்? என்பதை கூறு என்று கேட்டார். சீடரும் நடந்த சம்பவத்தை விளக்கினார்.

எந்த மூலிகையைத் தேடி அலைந்தோமோ அது இங்கு இருக்கின்றதை அறியாமல் போனேமே என்று மகிழ்ந்த குரு எங்கே அந்த குச்சி என வின வினார். தங்களுக்கு அஞ்சிய நான் அதன்மகிமை தெரியாமல் அதனை அடுப்பில் விட்டேன் என்றார். உடனே குரு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே, இனி என்ன செய்வது? என்று எண்ணி வேறு வழியின்றி சீடர் உண்ட சோற்றை கக்க வைத்து அதை தான் உண்டு அவரும் (குருவும்) இளமைப்பெற்றார். இவ்வாறு இருவரும் இளமையைப்பெற்றனர்.

இவ்வாறு மூலனும் அவரது சீடரும் இளமையைப்பெற்ற தால் இத்திருத்தலத்திற்கு அருகில் உள்ள இளம்பிள்ளை என்றுபெயர்பெற்று இன்று வரை அதேபெயரில் வழங்கி வருகின்றது. இத்திருத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சித்தேசுவரர் திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்றழைக்கப்படும் காலங்கி நாதர் என்பது தெளிவாகிறது.

இக்கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சித்தேசுவரரை வழிபட்டு செல்கின்றனர். இதனால் இக்கோவில்பொது மக்களால் அமாவசைக் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் இறைவனை மனதில் நினைத்து தங்கள் இன்னல்கள் நீங்கி இன்பமாய் வாழ்ந்திட மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் விரும்பியவாறு, வேண்டியவாறு பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன, காரியங்கள் கைகூடுகின்றன என்பதை பக்தர்கள் கண்கூடாக பார்க்கின்றனர்.
Tags:    

Similar News