ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருவிடைமருதூர்

Published On 2017-11-15 02:46 GMT   |   Update On 2017-11-15 02:47 GMT
திருவிடைமருதூர் திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது.
திருவிடைமருதூர் திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது. ஆம்! பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் அகற்றிய புண்ணியபூமி திருவிடைமருதூர் ஆகும்.

இத்தலத்தில் பிரம்மஹத்திக்கு தனி சன்னிதி உள்ளது. ஒருவருக்கு திருமணத்தடை காலம் தள்ளிக்கொண்டேபோகுதல், புத்தி சுவாதினம் இல்லாமல் இருத்தல், போதல், மருத்துவத்துக்கும் கட்டுப்படாத நோய்களால் அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காக ஜெயில் தண்டனை அனுபவித்தல், உத்தியோகத் தடை உண்டாதல், கணவன்-மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம் முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.

ஒருவன் செய்யாத தவறை, செய்தான் என சொல்லும் பொய்கள் கூட பாவங்களாகின்றன. முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல், திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை மணம் புரிதல்,



திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல், நன்றாக வளர்ந்து வரும் மரம் செடி கொடிகளை வெட்டி எறிதல், கருகலைப்பு செய்பவர்கள் ஆகியோரையும் பிரம்மஹத்தி தோஷம் எளிதில் அண்டிவிடுகிறது. இந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிவாரணம் பெற, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வழிபாடு செய்வது சிறந்ததாக கூறப்படுகிறது.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியாக வெளிவராமல், அம்பாள் பெருநலமாமுலையம்மை சன்னிதியில் வழிபட்டு, அம்பாள் மூகாம்பிகையையும் வழிபாடு செய்து அதன் அருகில் உள்ள வாசல் வழியாகத்தான் வெளிவர வேண்டுமாம். அப்படிச் செய்வதால் பிரம்மஹத்திக்கு நிகரான சகல பாவங்களும் இத்தல பிரம்மஹத்தியிடம் சேர்ந்து, மீண்டும் அவை நம்மை அண்டாது என்கிறார்கள்.

திருவிடைமருதூரில் தினமும் காலை 8 மணி, 9 மணி, 10 மணிக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவாரண பரிகாரம் செய்கிறார்கள்.
Tags:    

Similar News