ஆன்மிகம்

3 மாதங்களுக்குள் திருமண தடை நீக்கும் கோவில்

Published On 2017-11-09 08:07 GMT   |   Update On 2017-11-09 08:07 GMT
குழந்தைபேறு இல்லாதவர்கள் கபிஸ்தலத்தில் இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பேறு உறுதி என்கின்றனர் பக்தர்கள்.
தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று கன்னிப்பெண்கள் கவலைப்படாத நாளே இருக்க முடியாது. இந்தக் கவலை தீர அவர்கள் வேண்டாத தெய்வங்களும் இருக்க முடியாது. இவர்களது கவலையைத் தீர்க்கும் அன்னை கபிஸ்தலத்தில் இருக்கிறாள்.

ஆம்! கீழ கபிஸ்தலத்தில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வரர். இறைவி பெயர் காமாட்சி அம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி உள்ளது.

குழந்தைபேறு இல்லாதவர்கள் இங்கு நடைபெறும் பிரதோஷத்தில் 11 நாட்கள் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பேறு உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வேண்டும் என இறைவியிடம் முறையிடுகின்றனர். அத்துடன் கண்ணாடி வளையல்களை மாலையாகக் கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வணங்குகின்றனர். பின், அந்த வளையல்களை பிற பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.

அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. 90 நாட்களுக்குள் அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் பக்தர்கள்.

கல்யாணமாகாத கன்னிப் பெண்களை தன் பெண்களாய் பாவித்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து அருளும் அன்னை காமாட்சி அம்பிகையை தன் தாயென கன்னியர் போற்றி மகிழ்வதில் வியப்பென்ன இருக்கிறது.

தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ கபிஸ்தலம்.
Tags:    

Similar News