ஆன்மிகம்

பாவம், தோஷம் நீக்கும் சாமவேதீஸ்வரர்

Published On 2017-03-29 08:00 GMT   |   Update On 2017-03-29 08:00 GMT
பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ள அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமங்கலம் என்ற தலம். பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ளது அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம்.

பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் மாத்ருஹத்தி எனும் தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். அவரது தோஷம் நீங்கியது. இதனால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஊருக்கு பரசுராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்க பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார்.

அவரைப் பற்றிய தோஷம் நீங்கவில்லை. இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி கூற சண்டிகேசுவரரும் இறைவனின் சன்னிதியின் இடது புறம் இருந்து இறைவனை வணங்கினார். அவரது தோஷம் விலகி இறைவனடி சேர்ந்தார். இறைவனின் அர்த்தமண்டப நுழைவு வாசலில் சண்டி கேசுவரரின் திருமேனியை நாம் காணலாம். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் ஆகும்.

சனி பகவானின் வாகனம் காகம். பொதுவாக காகம் தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள சனி பகவானின் வாகனம் வடக்கு திசை நோக்கி அமைந்திருப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். சனி பெயர்ச்சியின் போது இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும். ஜென்ம சனி, பாத சனி, அஷ்டமசனி ஆகியவை சனிபகவானை வழிபடுவதால் விலகி ஓடும் என்பது அனைவரும் அறிந்த நிஜம்.

இந்த ஆலயத்தில் பைரவரும், கால பைரவரும் சேர்ந்து இருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும். அர்த்தஜாம பூஜையின் போது பைரவர் பாதத்தில் வைத்த விபூதியை பூசுவதால் சகலவிதமான பில்லி சூன்யம் நோய்களும் குணமாகும் என கூறுகின்றனர் பக்தர்கள்.

மகம் நட்சத்திரத்தன்றும் சனிக்கிழமையன்றும் இக்கோவிலை 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச் சுளைகளை தானம் செய்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது இந்த ஊர் மக்கள் சொல்லும் நம்பிக்கையான செய்தி.

நம்மை பாதித்துள்ள தோஷங்களும், பாவங்களும் நீங்க நாமும் ஒரு முறை திருமங்கலம் சென்று வரலாமே!

Similar News