ஆன்மிகம்

தோஷங்கள் அகற்றும் முண்டகக்கண்ணி அம்மன்

Published On 2017-03-23 09:24 GMT   |   Update On 2017-03-23 09:24 GMT
முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.
மயிலாப்பூரின் பழமையான ஆலயம், ராகு - கேது தோஷம் நீக்கும் தலம், காலையில் தொடங்கி மதியம் வரை தொடர்ந்து அபிஷேகம் காணும் அம்மன் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது சென்னை மயிலாப்பூரில் வாழும் முண்டகக் கண்ணி அம்மன் ஆகும்.

மயிலாப்பூரில் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருவின் நடுப்பகுதியில், கிழக்கு முகமாக இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. எளிய மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வலது புறம் சிறிய நுழைவாயிலும் உள்ளது. கருவறைக்கு முன்பாக, இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்கின்றனர்.



இத்தலத்து அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். அம்மை நோய்க்கும், கண் நோய்க்கும் இந்த அம்மனை வழிபடலாம்.

மேலும், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகளுக்கும் வரம் தரும் அன்னையாகத் திகழ்கின்றாள். காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இந்நேரம் மாறுபடும்.

Similar News