ஆன்மிகம்
லூர்து மாதா

லூர்து அன்னைக்கு விழா

Published On 2021-06-03 06:01 GMT   |   Update On 2021-06-03 06:01 GMT
லூர்து நகரில் விசாரணை நடத்திய திருச்சபை அதிகாரிகள், அன்னை மரியா காட்சி அளித்தது உண்மை என்று உறுதி செய்தனர். 1907 பிப்ரவரி 11ந்தேதி லூர்து அன்னைக்கு விழா கொண்டாடும் வழக்கம் முதன்முதலாக உருவானது.
அன்னை மரியா, லூர்து நகரில் காட்சி அளித்ததை நினைவுகூரும் வகையில் இந்த திருநாள் பிப்ரவரி 11ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. திருச்சபை விழாக்களின் பட்டியலில் இது ஒரு விருப்ப நினைவாக இடம் பெற்றுள்ளது.

1858 பிப்ரவரி 11 முதல் ஜூலை 16ந்தேதி வரை பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில், பெர்னதெத் சூபிரூஸ் என்ற சிறுமிக்கு மரியன்னை பதினெட்டு முறை காட்சி அளித்தார். இளம் கன்னிப் பெண்ணாக காணப்பட்ட அன்னை மரியா, தமக்காக அங்கு ஓர் ஆலயம் எழுப்ப வேண்டுமென கோரிக்கை விடுத்தார். பிப்ரவரி 25ந்தேதி இரண்டாவது முறையாக தோன்றிய அன்னை, பெர்னதெத்தை கொண்டு ஒரு நீரூற்று தோன்றச் செய்தார்.

மார்ச் 25ந்தேதி மூன்றாம் முறையாக தோன்றிய அன்னை, “நானே அமல உற்பவம்” என்று தம்மை அறிமுகம் செய்தார். அடுத்தடுத்த காட்சிகளில், பாவிகள் மனந்திரும்ப செபமும் தவமும் செய்யுமாறும் அறிவுறுத்திய அவர், பெர்னதெத்தை செபமாலை செபிக்க வைத்தார். அன்னை மரியாவின் காட்சி பற்றி அறிந்த மக்கள், அந்த இடத்தில் பெர்னதெத்தோடு சேர்ந்து செபிக்கத் தொடங்கினர்.

பெர்னதெத் தோண்டிய நீரூற்றில் இருந்து பருகிய பலரது உடல், உள்ள நோய்கள் குணம் அடைந்ததால், பலரும் அங்கு திருப்பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். லூர்து நகரில் விசாரணை நடத்திய திருச்சபை அதிகாரிகள், அன்னை மரியா காட்சி அளித்தது உண்மை என்று உறுதி செய்தனர். இதையடுத்து 1862ஆம் ஆண்டு திருத்தந்தை 9ம் பியுஸ் இந்த காட்சிக்கு அங்கீகாரம் வழங்கினார். 1907 பிப்ரவரி 11ந்தேதி லூர்து அன்னைக்கு விழா கொண்டாடும் வழக்கம் முதன்முதலாக உருவானது.
Tags:    

Similar News