ஆன்மிகம்
புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி

Published On 2021-01-25 05:42 GMT   |   Update On 2021-01-25 05:42 GMT
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வில்லுக்குறி, மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். தொடர்ந்து வந்த நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தன.

3-ம் நாளில் செங்கல்பட்டு மறைமாவட்ட கொளப்பாக்கம் பங்குத்தந்தை ஜான் பெஞ்சமின் தலைமையில் திருமுழுக்கு வழங்கும் திருப்பலியும், நற்கருணை பவனியும், நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

6-ம் திருவிழாவில் நடந்த புனித செபஸ்தியார் தின திருப்பலியில் முரசன்கோடு பங்குத்தந்தை பெனிற்றோ தலைமை தாங்கினார். திருப்பலியை தொடர்ந்து புனிதரின் அருளிக்கம் முத்தமிடும் நிகழ்வு நடைபெற்றது.

9-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு, முதல் திருவிருந்து திருப்பலியும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும், சிறப்பு தவில் வாத்தியமும், வாணவேடிக்கையும் நடந்தன. விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணிக்கு தேர்பவனியும் நடைபெற்றது. இதில் 3 தேர்கள் கோவிலையொட்டி உள்ள நான்கு வீதிகளும் சுற்றி வந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்ச்சை காணிக்கைகளை செலுத்தினர்.

இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை ஷிஜின், பங்குபேரவை துணை தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பாபியோன் ராஜ், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News