ஆன்மிகம்
குருசுமலையில் மலைகுகை மாதா- புனித தோமையார் ஆலயம்

திருமூலநகர் குருசுமலையில் மலைகுகை மாதா- புனித தோமையார் ஆலயம் திறப்பு

Published On 2021-01-25 03:06 GMT   |   Update On 2021-01-25 03:06 GMT
திருமூலநகர் குருசு மலையில் மலைக்குகை மாதா மற்றும் புனித தோமையார் ஆலயத்தை சினிமா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி அருகே அழகப்பபுரம் திருமூலநகர் குருசு மலையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், சினிமா தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் மலைக்குகை மாதா மற்றும் புனித தோமையார் ஆலயம் கட்டி கொடுத்துள்ளார்.

இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இந்த விழாவுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மைக்குரு வி.ஜி. பன்னீர்செல்வம், முதன்மைச் செயலாளர் நூர்பர்ட், வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமூல நகர் குருசுமலை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் வரவேற்று பேசினார்.

இதில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். இந்த விழாவில் சினிமா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலைகுகை மாதா ஆலயத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பி.டி.செல்வகுமார் என்னை அழைத்தார். அப்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வர முடியவில்லை. இந்த ஆலயத்தை ஒரு இந்து கட்டி கொடுத்திருப்பது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இதை கட்டி கொடுத்த பி.டி.செல்வகுமாரை பாராட்டுகிறேன்.

நான் எங்கு சென்றாலும் என்னை நடிகர் விஜய்யின் தந்தை என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். என் மகனுக்கு நல்ல ஒரு தந்தையாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

விழாவில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பேசுகையில், இந்த குருசுமலையில் மலைகுகை மாதா மற்றும் புனித தோமையார் ஆலயத்தை கட்டிக் கொடுத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இது கடவுள் எனக்கு கொடுத்த ஒரு பாக்கியமாகும். இந்த குருசுமலை சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது என்றார்.

விழாவில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை பவி டீச்சர், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சிவ பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட துணைத்தலைவர் ஜெபர்சன், சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவி ஸ்ரீரங்கநாயகி, மாவட்ட மாணவரணி தலைவர் பழனிகுமார், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் காப்பித் துறை, பொட்டல்குளம் அன்னை வேளாங்கன்னி கல்லூரி நிறுவனர் பீட்டர் யேசுதாஸ் மற்றும் திருமூல நகர் குருசுமலை பங்கு பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

முன்னதாக புனித ஜார்ஜியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
Tags:    

Similar News