ஆன்மிகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.

மதுரை தேவாலயங்களில் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

Published On 2020-12-24 10:23 IST   |   Update On 2020-12-24 10:23:00 IST
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் உள்ள தேவாலயங்களில் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. உயர் மறைமாவட்ட பேராயர் ஆராதனை நடத்துகிறார்.
இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.

மதுரை கீழவெளிவீதியில் உள்ள தேவாலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி சிறப்பு ஆராதனை நடத்துகிறார். இதுபோல், புதூர் லூர்துஅன்னை ஆலயத்தில் பங்குதந்தை தாஸ்கென்னடி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிநடைபெறுகிறது.

தமிழக ஆயர் பேரவை தலைவரும், மதுரை உயர் மறை மாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

ஏறக்குறைய 9 மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை, பொதுமுடக்கம், நம் அன்புக்குரியவர்களின் பிரிவு, மறைவு தந்த வருத்தம், சோகம் போன்றவற்றிலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம். மானுடம் தன் எதிர்நோக்கை இன்றும் தக்கவைக்க காரணம், பலர் தங்களை இந்த வலுவற்ற மானுடத்திற்கான கையளித்து உடன் நின்றது தான் எந்தவொரு எதிர்மறை நிகழ்வும் கடவுள் நம்மோடு இருக்கும் வரை நம்மை பின்னோக்கி இழுக்க முடியாது.

குழந்தையின் எளிமையில், வலுவற்ற நிலையில், கையறுநிலையில், சார்பு நிலையில் கடவுள் வந்து பிறக்கிறார். நம் வாழ்விலும் எளியவர்களையும், வலுவற்ற நிலையில் உள்ளவர்களையும், கையறு நிலையில் உள்ளவர்களையும், சார்பு நிலையில் உள்ளவர்களையும் நாம் தேடிச் சென்றால் அங்கே கிறிஸ்து ஒவ்வொரு நாளும் பிறக்கிறார்..

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News