ஆன்மிகம்
கோட்டார் புனித சவேரியார்

10-ம் நாள் திருவிழா: கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் திருப்பலி நடந்தது

Published On 2020-12-04 08:37 GMT   |   Update On 2020-12-04 08:37 GMT
நாகர்கோவில், கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் நாள் திருவிழா நடந்தது. இதில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1-ந் தேதி 8-ம் நாள் திருவிழா நடந்தது. அன்று இரவு தேர்ப்பவனி நடைபெற்றது.

வழக்கமாக தேர்ப்பவனி பேராலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். அப்போது தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் உருண்டு வணங்கியும், கும்பிடு நமஸ்காரம் செலுத்தியும் தங்களுடைய நேர்ச்சையை செலுத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளின்படி ஆலய வளாகத்துக்குள்ளேயே தேர்ப்பவனி நடந்தது. நேற்று முன்தினம் 9-ம் நாள் திருவிழா நடந்தது.

திருவிழாவின் 10-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு புனித சவேரியாரின் பெருவிழாத் திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றினார். அவருடன் மறைமாவட்ட முதன்மைப் பணியாளர் கிளாரியுஸ், செயலாளர் இம்மானுவேல்ராஜ், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், மறைவட்ட முதல்வர் மைக்கில் ஏஞ்சலுஸ், பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை ஜார்ஜ் கபிரியேல் கிஷோர் ஆகியோரும் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.

தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாளத் திருப்பலியும், 11 மணிக்கு தேர்ப்பவனியும் நடந்தது. தேர்ப்பவனியின் போது புனித மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார், புனித தேவமாதா ஆகியோரின் சொரூபம் தாங்கிய 4 தேர்கள் பேராலய வளாகத்துக்குள் பவனியாக வந்தன. கொரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பக்தர்கள் தேர்ப்பவனியின்போது வழிபாடு செய்தனர். பலர் பூக்கள், மாலைகள், உப்புமிளகு, மெழுகுவர்த்திகள், புதுத்துணிகள், பழவகைகள் ஆகியவற்றை காணிக்கையாகவும், நேர்ச்சையாகவும் செலுத்தி வழிபட்டனர்.

மாலை 6 மணிக்கு தேரில் திருப்பலி நடந்தது. புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

திருவிழா தொடர்பாக பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன் கூறுகையில், “புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா சீரும், சிறப்புமாக நடந்து முடிந்தது. அரசின் வழிகாட்டுதல்படியும், அதிகாரிகளின் அறிவுரைப்படியும் கொரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி திருவிழாவை நடத்த ஒத்துழைத்த அனைத்து பக்தர்களுக்கும் பேராலய நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் திருவிழா நடத்த தகுந்த கொரோனா கால வழிகாட்டுதல்களை வழங்கிய அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்“ என்றார்.
Tags:    

Similar News