ஆன்மிகம்
திருத்தூதர் பணிகள் நூல்

திருத்தூதர் பணிகள் நூல்

Published On 2019-11-20 04:21 GMT   |   Update On 2019-11-20 04:21 GMT
இயேசுவின் மரணத்தில் தொடங்கி, பவுல் ரோம் நகரில் சிறையான நிகழ்வு வரையிலான சுமார் 30 முதல் 35 ஆண்டு கால திருச்சபை வரலாற்றைக் குறித்த மிக முக்கியமான பதிவுகளின் தொகுப்பாக இருக்கிறது திருத்தூதர் பணிகள் நூல்.
திருத்தூதர் பணிகள் நூலை எழுதிய லூக்கா சிரியாவிலுள்ள அந்தியோக்கியாவில் பிறந்தவர். இவர் ஒரு மருத்துவர். பவுலுடன் தொடர்ந்து பயணித்த அனுபவம் உடையவர். சிசேரா, ரோம் ஆகிய இடங்களில் தங்கியிருந்த காலகட்டத்தில் இந்த நூலை அவர் எழுதியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

பிராக்சிஸ் எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து இந்த நூலுக்கான தலைப்பு பெறப்பட்டுள்ளது. “திருத்தூதர் பணிகள்” என நூலில் தலைப்பு சொன்னாலும், எல்லா திருத்தூதர்களின் பணிகளும் இந்த நூலில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த நூலில் கிட்டத்தட்ட பாதி இடத்தை ஆக்கிரமித்திருக்கும் பவுல் இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர் அல்லர்.

லூக்கா நற்செய்தியின் இரண்டாம் பாகமாக இந்த நூல் அமைந்துள்ளது. தியோபில் எனும் தனி நபருக்கு இந்த இரண்டு நூல்களையும் லூக்கா எழுதுகிறார். தியோபில் என்பவர் அன்றைக்கு அரசின் உயர்பதவியில் இருந்த ஒரு நபராய் இருந்திருக்கலாம். பவுல் சிறைபிடிக்கப்பட்ட காலத்தில் அவரை வெளிக்கொணர கிறிஸ்தவத்தின் பின்னணியும், பவுலின் பின்னணியும் தேவைப்பட்டது. அவற்றை தெளிவாகப் பதிவு செய்ய இந்த இரண்டு நூல்களையும் லூக்கா எழுதியிருக்கலாம் என தெரிகிறது.

இந்த நூலில் முக்கியமாக பவுலின் பணிகளும், பேதுருவின் பணிகளும் அமைந்துள்ளன. இருவருடைய பணிகளுக்கும் நிறைய ஒப்புமைகள் இருப்பதையும் லூக்கா சுட்டிக் காட்டுகிறார். இருவருமே அற்புதங்கள் செய்கிறார்கள், இருவருமே காட்சிகள் காண்கின்றனர், இருவருமே இறைமகன் இயேசுவைக் குறித்த நீண்ட செய்திகளை அளிக்கின்றனர், இருவருமே தங்கள் விசுவாசத்துக்காக கஷ்டப்படுகின்றனர், இருவருமே தூய ஆவியினால் நிரப்பப்படு கிறார்கள்.

இருவருமே சிறையில் அடைக்கப்பட்ட பின் வியப்பூட்டும் வகையில் விடுதலையாகிறார்கள், இருவருமே நோயாளிகளைக் குணமாக்குகிறார்கள், இருவருமே பேய்களை விரட்டுகிறார்கள், இருவருமே இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறார்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் மிகப்பெரிய வித்தியாசமாக பேதுரு தனது நற்செய்தி அறிவித்தலை பெரும்பாலும் யூதர்களுக்காய் நடத்துகிறார், பவுல் பெரும்பாலும் தனது நற்செய்தி அறிவித்தலை பிற இன மக்களுக்காய் நடத்துகிறார் என்பதைச் சொல்லலாம்.

பெந்தேகோஸ்தே நாளில் தூய ஆவியானவரின் வருகையுடன் திருத்தூதர் பணிகளின் கிறிஸ்தவ பரப்புதல் ஆரம்பமாகிறது. எருசலேமில் தொடங்கும் நற்செய்தி அறிவித்தல், பின்னர் யூதேயா, சமாரியா போன்ற இடங்களுக்குப் பரவி, கடைசியில் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது.

முதல் ரத்த சாட்சியான ஸ்தேவானின் கதை சவுலை அறிமுகம் செய்கிறது. பின் பிலிப்பு ஆற்றிய பணிகள் பற்றிய குறிப்பு வருகிறது. கிறிஸ்தவர்களைக் கொல்ல களமிறங்கும் சவுலும், அவரது மனமாற்றமும் நூலை பரபரப்பாய் கூட்டிச் செல்கின்றன.

நற்செய்தி நூல்களுக்கும் திருமுகங்களுக்கும் இடையேயான அற்புதமான ஒரு இணைப்புப் பாலமாக திருத்தூதர் பணிகள் அமைந்திருக்கிறது. இந்த நூல் இல்லையேல், ஆதித் திருச்சபையின் நிகழ்வுகளும், இயல்புகளும், தன்மைகளும், போதனைகளும், தூய ஆவியானவரின் செயல்பாடுகளும், இயேசுவின் கடைசி வார்த்தைகளும் நமக்கு தெரியாமலேயே போயிருக்கும்.

தூய ஆவி நிரப்புதல், எப்படி திருமுழுக்கு கொடுப்பது, திருச்சபை என்பது எப்படி இருந்தது? எப்படி இருக்க வேண்டும்? எவையெல்லாம் இருக்கக் கூடாது? திருச்சபையில் தலைவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்? எப்படிப்பட்ட குணாதிசயங்கள் அவர்களிடம் இருந்தன? போன்றவையெல்லாம் திருத்தூதர் பணிகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

பலங்களையும் பலவீனங்களையும் ஒரு சேர பதிவு செய்யும் நூலாக இந்த நூல் இருக்கிறது. பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே நடந்த எதிர்கருத்துகளையும் இது பதிவு செய்கிறது, ஒரு பொய் சொன்னதற்காய் உயிரை விட்ட அனனியா சப்பிராள் தம்பதியரையும் இது பதிவு செய்கிறது.

திருச்சபையின் வளர்ச்சி, விரிவாக்கம் போன்றவற்றுக்கான ஒரு சிறந்த நூலாகவும் இந்த நூலை பயன்படுத்தலாம். மோசேயின் சட்டங்களை விட்டு, இயேசுவின் சட்டங்களைக் கைக்கொண்ட அனுபவத்தை திருத்தூதர் பணிகளில் நாம் காண முடியும்.

இன்றைய திருச்சபையோடு ஒப்பிடும்போது திருத்தூதர் பணிகள் காட்டும் திருச்சபை பல வேறு பாடுகளைக் கொண்டுள்ளது. அன்று, திருச்சபைக்கென ‘சர்ச்’ கட்டிடங்கள் ஏதும் இல்லை. எல்லாமே இலவசமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள கொடுக்கப்பட்ட கட்டிடங்கள் தான். மக்கள் இல்லங்களில் தான் பெரும்பாலும் சந்தித்து இறைவனை வழி பட்டனர்.

திருச்சபைத் தலைவர்களிடையே வேறுபாடு காணப்படவில்லை. யாரும் தங்களுக்கென பதவிகளையோ, அடைமொழிகளையோ கொண்டிருக்கவில்லை. திருச்சபையில் அப்போது பிரிவுகளோ, பாகுபாடுகளோ இருக்கவில்லை.

அவர்கள் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு பணி செய்தார்கள், பெரிய நகரங்களை அடைந்து நற்செய்தி அறிவித்தனர், இயேசுவுக்கான சீடர்களை உருவாக்கினர், திருச்சபைகளை உருவாக்கினார்கள், மூப்பர்களை ஏற்படுத்தினர், பின் அடுத்த இடத்துக்கு பயணமானார்கள்.

இயேசுவின் மரணத்தில் தொடங்கி, பவுல் ரோம் நகரில் சிறையான நிகழ்வு வரையிலான சுமார் 30 முதல் 35 ஆண்டு கால திருச்சபை வரலாற்றைக் குறித்த மிக முக்கியமான பதிவுகளின் தொகுப்பாக இருக்கிறது இந்த நூல்.
Tags:    

Similar News