ஆன்மிகம்
இயேசு

குழுவாக செயலாற்றுவோம்

Published On 2019-09-14 03:47 GMT   |   Update On 2019-09-14 03:47 GMT
குழுவாக நாம் செயல்பட ஆரம்பிக்கின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயல்களில் ஒன்று, சுறுசுறுப்பான மனிதர்களை நமது அருகில் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும்.
உலகில் நிகழ்த்தப்படுகின்ற சாதனைகளை பட்டியலிட்டு ஆய்வு செய்து பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை கூட்டு முயற்சியால் விளைந்தவையே ஆகும். குழுவாக செயல்படும் போது ஏராளமான நன்மைகளை பெற முடியும். இன்றைய காலவேகத்தில் கூட்டாக பணிபுரிவது வெகுவாக அரிதான ஒன்றாக மாறிப்போய் விட்டது. எல்லோருமே தனித்தனி மரமாகவே காட்சியளிக்கிறார்கள். இதனை மாற்றுவதற்கும், முறையான பாதையில் பயணம் செய்வதற்கும் நாம் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்ய வேண்டும்.

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் நார்மன் ஈ போர்லாக் என்பவருக்கு 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி டெல்லியில் விஞ்ஞான்பவனில் வைத்து இந்திய அரசு சார்பில் எம்.எஸ். சுவாமிநாதன் விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் பேராசிரியர், விஞ்ஞானிகள் அமர்ந்திருந்த இடத்தை பார்த்து இந்தியாவில் ஏற்பட்ட மாபெரும் மறுமலர்ச்சிக்கு அனைவரும் இணைந்து கூட்டாக செயலாற்றியதே என வியந்து பாராட்டினார். கூட்டாக செயலாற்றுதலே மாபெரும் சாதனைக்கு அச்சாரம் என்றார்.

இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் உலகத்தில் காணப்படும் பல்வேறு விதமான முரண்பாடுகளை களைந்தெறியவதற்கு நாம் ஒவ்வொருமே அழைக்கப்படுகின்றோம். தனித்தனி மனிதர்களாக அல்ல, மாறாக குழுவாக செயல்பட வேண்டும். குழுவாக நாம் செயல்பட ஆரம்பிக்கின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயல்களில் ஒன்று, சுறுசுறுப்பான மனிதர்களை நமது அருகில் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். அவர்களின் சுறுசுறுப்பு இன்னும் அதிக சக்தியுள்ள காரியங்களை செய்வதற்கு நமக்கு வழிகாட்டும். உங்களுக்கும், உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போன்றே உங்கள் அருகில் இருப்பவருக்கும் தொடர்பு உண்டு.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதனை அடைய வேண்டும் என்ற துடிப்போடு இயங்குகின்றவர்களை உடன் வைத்திருங்கள். உங்கள் அருகில் இருப்பவர்கள் பார்த்து நீங்கள் உற்சாகம் பெறுவதை போன்று உங்களை பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வாய்ப்பு உண்டு. பிறரோடு இணைந்து செயலாற்றி உலகம் உயிர்த்துடிப்போடு இயங்குவதற்கு வழிகாட்டுவோம்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.

Tags:    

Similar News