ஆன்மிகம்
செப்பனியா

பைபிள் கூறும் வரலாறு: செப்பனியா

Published On 2019-09-11 03:08 GMT   |   Update On 2019-09-11 03:08 GMT
செப்பனியா நூலுக்கும், திருவெளிப்பாடு நூலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு நூலுமே கடவுளின் பிள்ளைகளுக்கான நியாயத் தீர்ப்பை முதலில் பேசுகிறது
செப்பனியா நூல் அளவில் மிகச்சிறிய நூல்களில் ஒன்று. வெறும் மூன்று அதிகாரங்களும், 56 வசனங்களும், 1476 வார்த்தைகளும் தான் இந்த நூலின் உள்ளடக்கம். சின்ன இறைவாக்கினர்கள் 12 பேரில் 9 ஆவதாக வருகிறார் இவர்.

‘செப்பனியா’ என்னும் பெயருக்கு “கடவுள் மறைத்து வைக்கிறார்” என்பது பொருள். இந்த நூலை எழுதியவர் இறைவாக்கினர் செப்பனியா. கி.மு. 640- க்கும் கி.மு. 612- க்கும் இடைப்பட்ட காலத்தில் இது எழுதப்பட்டதாய் நம்பப்படுகிறது.

செப்பனியா இறைவாக்கினரைப் பற்றி அதிக தகவல்களை விவிலியம் நமக்குச் சொல்லவில்லை. அதே நேரத்தில் முந்தைய மூன்று தலைமுறையின் பெயர்களைச் சொல்லி அறிமுகம் செய்து வைக்கப்படும் ஒரே இறைவாக்கினரும் இவர் தான். இவரது முந்தைய மூன்றாம் தலைமுறை மன்னர் எசேக்கியாவில் சென்று நிறைவடைகிறது. இதன் மூலம் இவர் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது.

அதற்குப் பின்பு வந்த மனாசே காலத்தில் அரச பரம்பரையினர் எல்லாம் கொல்லப்பட்ட போது செப்பனியா மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவருக்கு இந்த பெயர் வந்திருக்கலாம் என்பது சிலருடைய கருத்து.

மனாசேயின் காலம் பாவத்தின் கோரத்தாண்டவமாய் இருந்தது. அவரது 55 ஆண்டுகால ஆட்சிக்குப்பின் வந்த ஆமான் வலுவற்ற ஒரு மன்னன். அவரால் எதையும் நேராக்க முடியவில்லை. அவரது இரண்டு ஆண்டு ஆட்சிக்குப் பின் யோசியா தனது 8- வது வயதில் ஆட்சிக்கு வந்தார்.

சுமார் எழுபது ஆண்டுகாலம் இறைவனின் குரல் ஒலிக்காத தேசத்தில் செப்பனியா அனுப்பப்படுகிறார். “ஆண்டவரின் நாள்” வருகிறது எனும் குரலாக செப்பனியா அங்கே முழங்கினார். ‘கடவுளுடைய கோபம் உள்ளுக்குள்ளே கனன்று எரிகிறது, அது வெளிப்படும் நாளை யாரும் தாங்க முடியாது’ என்பதே அவருடைய எச்சரிக்கையின் தொனியாக இருந்தது.

செப்பனியா இறைவாக்கினரின் இறைவார்த்தைகளும் எச்சரிக்கைகளும், பிற இறைவாக்கினர்களின் எச்சரிக்கையைப் போன்றே அமைகிறது. வேற்று தெய்வ வழிபாடுகள் மீது கடவுளின் கோபம் கொழுந்து விட்டு எரிவதை அவரது வார்த்தைகள் விளக்கின. மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய தலைவர்கள் அதை விட்டு விட்டு மக்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதை அவர் கண்டித்தார்.

ஆனாலும் மக்கள் மனம் மாறி இறைவனிடம் திரும்பினால் அழிவிலிருந்து தப்பலாம் எனும் விடுதலையின் செய்தியையும் அவர் அறிவிக்கிறார்.

செப்பனியாவின் எச்சரிக்கை யோசியா மன்னனின் மனதில் படிப்படியான மாற்றத்தைக் கொண்டு வந்தது. இரண்டு முக்கியமான சீர்திருத்தங்களை அவர் செய்தார். கி.மு. 628-ல் பாகாலின் பலிபீடங்களை உடைத்து, அசேராக் கம்பங்களை வெட்டி, போலி தீர்க்கத்தரிசிகளின் எலும்புகளை எரித்து, வேற்று தெய்வ ஓவியங்களை அழித்து ஒரு சீர்திருத்தம் செய்தார்.

இரண்டாவது சீர்திருத்தம், கி.மு. 622- ல் குரு இலக்கியா கடவுளின் புனித நூலைக் கண்டெடுத்தபோது நிகழ்ந்தது. திருச்சட்ட நூலை வாசித்த அவர் மக்கள் இறைவனின் வழியில் நடக்க வேண்டுமென சட்டம் இயற்றினார்.

ஆன்மிகத்தை சட்டமியற்றி செயல்படுத்த முடியாது என்பதை அவர் அறியவில்லை. மக்கள் இறைவனின் பக்கம் திரும்பவில்லை.

சாவுக்குப் பிறகு எல்லோருக்கும் நியாயத் தீர்ப்பு வரும். நியாயத் தீர்ப்பு முதலில் இறை மக்களுக்கும் பின்னர் பிற இன மக்களுக்கும் வரும் எனும் புதிய ஏற்பாட்டுச் சிந்தனைகளை செப்பனியா நூலில் காணலாம்.

யூதாவைச் சுற்றியிருந்த நாடுகள் அனைத்தையும் அவர் எச்சரித்தார். மேற்கே பெலிஸ்தியர், கிழக்கே மோவாபியர், தெற்கே எத்தியோப்பியர் மற்றும் வடக்கே அசீரியர் என அனைவருக்கும் அழிவின் எச்சரிக்கையை செப்பனியா உரைத்தார்.

செப்பனியா நூலுக்கும், திருவெளிப்பாடு நூலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு நூலுமே கடவுளின் பிள்ளைகளுக்கான நியாயத் தீர்ப்பை முதலில் பேசுகிறது. இஸ்ரேலுக்கும், திருச்சபைக்கும் அந்த எச்சரிக்கை விழுகிறது. பின்னர் பிற தேசங்களுக்கான தீர்ப்பைப் பேசுகிறது. கடைசியில் நீதித் தீர்ப்பு நாளைப் பற்றிப் பேசுகிறது.

இறைவாக்கினர்கள் எரேமியா மற்று அபக்கூக்கு ஆகியோருடைய காலத்தில் வாழ்ந்தவர் செப்பனியா. யூதாவை எப்படியாவது மீட்க முடியுமா என கடைசி முயற்சியாக களமிறங்கிய இறைவாக்கினர் அவர்.

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;

இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;

மகளே எருசலேம்!

உன் முழு உள்ளத்தோடு

அகமகிழ்ந்து அக்களி.

ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத்

தள்ளிவிட்டார்;

உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர்

உன் நடுவில் இருக்கின்றார்;

நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

எனும் நம்பிக்கையின் வார்த்தைகளுடன் செப்பனியா நூல் நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News