ஆன்மிகம்
வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி

வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி

Published On 2019-09-10 05:00 GMT   |   Update On 2019-09-10 05:00 GMT
வாடிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
தென்னகத்து வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 29-ந்தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் பால்ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினசரி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய விழாவாக நேற்று முன்தினம் ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா, இறைவார்த்தை சபை 144-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவ ஊற்று இயேசுவின் அருமருந்து 19-வது ஆண்டு பிறப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. மேலும் அன்றைய தினம் மாலை நற்கருணை ஆராதனையும், முப்பெரும் விழா கூட்டுத்திருப்பலியும் மதுரை உயர்மாவட்டம் முதன்மைகுரு ஜெயராஜ் தலைமையில் நடந்தது.

அதன்பின்பு வண்ண விளக்குகள், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பட்டாடை உடுத்தி குழந்தை ஏசுவை கையில் ஏந்தியபடி ஆரோக்கிய அன்னை எழுந்தருளினார். தொடர்ந்து தேர்பவனி புறப்பட்டு மதுரை-திண்டுக்கல் நகர்புற சாலை வழியாக கோர்ட்டு வரை சென்று திரும்பியது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

திருவிழாவில் நேற்று கொடியிறக்கம் நன்றி திருப்பலியுடன் பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை எஸ்.வி.டி. அதிபர் ஜோசப், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், எஸ்.வி.டி. உதவி பங்குத்தந்தை யூஜின்டென்சிங், அகஸ்டின்காரமல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News