ஆன்மிகம்
இயேசு

உனக்கு பயம் வேண்டாம்

Published On 2019-08-26 06:14 GMT   |   Update On 2019-08-26 06:14 GMT
அவருக்கு பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். அவர் கவனித்துக் கேட்பார். ‘என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்’ என்றார். ஆமென்.
சகல உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் வார்த்தையினால் படைத்த கர்த்தரே, பராக்கிரமசாலியாய் உன்னோடு இருக்கும்போது உனக்கு பயம் வேண்டாம். நீதியையும் நியாயத்தையும் பாரபட்சமின்றி அவனவனுடைய கிரியைகளின்படி, சரியாய் நியாயத்தீர்ப்பு செய்கிற நீதிதேவன் உன்னோடு இருக்கும்போது நீ பயப்படாதே.

‘கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றார்’. (உபா.31:8)

உலகத்திலே ஜனங்கள் அநேக காரியங்களை குறித்து பயப்படுகிறார்கள். எப்பொழுதும் பயப்படுகிற மனிதர்களும் இருக்கிறார்கள். இறைவனுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். அதிகமாக அன்புகூர்ந்து அவரைத்தேடினால் பயத்தின் ஆவியை எடுத்து போட்டு தேவ பலத்தின் ஆவியை தருவார்.

சர்வ வல்லவரை சார்ந்துகொண்டு வாழ்பவர்களை ஒரு போதும் அவர் கைவிடுவதில்லை. அவர் வார்த்தைக்கு செவி கொடுத்து முழு இதயத்தோடு, அவரைத்தேடி, நெருங்கிய உறவு வைத்துக்கொண்டால் உன்னை விட்டு அவர் விலக மாட்டார்.

அவருக்கு பயப்படுகிற மனுஷனுக்கு அவன் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். தேவ நன்மையினால் அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும். அவருடைய ரகசியம் அவருக்கு பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து அவர்கள் கூப்பிடுதலை கேட்பார். அவர்களுக்கு முன்பாக தேவமகிமை செல்லும்.

பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்கு பயப்படுகிறவர்களுக்கு அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்குகிறது போல தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குவார்.

ஆண்டவருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் பாக்கியவான். நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கிறார்.

‘கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று அதனால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்’. (நீதி. 14:26,27)

மழையானது இளம்பயிரின் மேல் பொழிவது போல தேவனுக்கு பயந்தவர்களுக்கு தெளிந்த புத்தியுள்ள ஆவியை பொழிகிறார். அவர்மேல் திடநம்பிக்கை வைத்து, முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால் கிறிஸ்துவின் பிள்ளைகளாக இருப்போம்.

‘நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள். இயேசுவை நம்புகிறவன் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல இருப்பான். அவன் பிள்ளை களுக்கு அடைக்கலமாக இருப்பார்’.

மனிதன் பாவம் செய்து பயந்து நடுங்குகிறான். கெட்ட பழக்கத்தில் சென்று அதைவிட முடியாமல் பயப்படுகிறான். கொடிய பழக்கத்தில் சென்று சரீரத்தை கெடுத்துக்கொள்கிறான்.

பயத்தினால் மரணக்கண்ணிகள் வந்தாலும் நீ மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கையை தேடினால், பரிசுத்த ஆவியானவர் உனக்கு உகந்த வாசனையாய் இருப்பார். உன் பாவங்களையும், மீறுதல்களையும் மன்னிப்பார். வேதத்தை வாசிக்கத் தொடங்கினால் உன் இதயத்திலிருந்து, ஜீவ ஊற்றாகிய மகிழ்ச்சி உண்டாகும்.

‘நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்’. (ஏசா.41:10)

அருள்நாதர் நம்மோடிருக்கும்போது, நாம் அஞ்சத் தேவையில்லை. வாழ்வின் எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்கும் கிருபையையும் பெலத்தையும் தருகிறார். சோதனை நேரத்தில் நமக்கு சமாதானம் தரும் ஊற்றாக இருக்கிறார். மனுஷனுக்குப் பயப்படும் பயம் நமக்கு கண்ணியை வருவிக்கும். அவரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

சாமுவேல் தீர்க்கதரிசி பயத்தோடு பரலோகத்தை பார்த்து மழைக்காக ஜெபித்தபோது உடனடி இடி முழக்கங்களையும், மழையையும் கட்டளையிட்டார். பெருமழை பெய்தது.

யோசுவா பயத்தோடு ‘ஆயிபட்டணத்தின் மேல் யுத்தத்திற்கு போகலாமா?’ என்று ஜெபித்தபோது, ‘நீ போகலாம்’ என்றார். ‘ஆயியின் ராஜாவையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்’ என்றார். யுத்தத்தில் யோசுவா ஜெயித்தான்.

அவருக்கு பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். அவர் கவனித்துக் கேட்பார். ‘என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்’ என்றார். ஆமென்.

ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சி. பூமணி, சென்னை-50.
Tags:    

Similar News