ஆன்மிகம்
வாழ்வு தரும் இறைவார்த்தை

வாழ்வு தரும் இறைவார்த்தை

Published On 2019-08-22 04:24 GMT   |   Update On 2019-08-22 04:24 GMT
ஏழை எளியோருக்கு இருப்பதை கொடுப்போம், பசியால் மடிவோரை தடுப்போம், தவறு செய்தால் தண்டனை என்பதை விட்டு அவர் திருந்திட நமது அன்பினை தருவோம்
பாவத்தை விட்டு புண்ணியத்தை சேர்க்க வழிகாட்டும் இந்தருணத்தில் இயேசுவின் பாடுகளை சிலுவைப்பாதையின் வழியே தியானித்து பாவத்தினால் மறத்துபோன நம் மனசாட்சிக்கு உயிர் தருவது இப்புனிதவாரம்.

விவிலியத்தில் அவர் கூறிய ஊதாரி மைந்தனின் கதைப்பற்றி நாம் அறிவோம். அவன் தன் தந்தையிடமிருந்து தனக்குரிய சொத்துக்களை பிரித்து எடுத்துச்சென்று ஊதாரித்தனமாக செலவழித்து பல்வேறு இன்னல்கள் அடைந்து தன்பாவ செயலுக்காய் மனம் வருந்தி தந்தையிடம் திரும்பி வந்து மன்னிப்பு வேண்டுகிறான். தந்தையும் அவன் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். இரக்கம் கொள்கிறார். நாமும் பிறரிடம் இரக்கம் உடையவர்களாய் இருக்க வேண்டுமென அவர் விரும்புகிறார்.

இரக்கத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் முதியோர்கள், ஏழைகள், உடல் ஊனமுற்றோர், நோயாளர்கள், ஆதரவற்றோர், அனாதைகள், விதவைகள், தனிமையல் வாழும் உள்ளங்கள் இன்னும் எத்தனையோ பேர் நம் கண்முன்னே நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களை காணும்போது நம் மனநிலை என்ன? நம்மாலான உதவி கரங்களை நீட்டி அவர்களை உவகை அடைய செய்கிறோமா? அவ்வாறு உதவிசெய் முன்வருவதே இத்தவக்காலத்தில் நாம் எடுக்கும் சிறந்த முடிவாகும். அதற்கு அடிப்படையாக இருப்பது தான் அன்பு. அன்பிருந்தால் இரக்கம் பிறக்கும், இரக்கத்தின் மூலமே நாம் இறைவனை அடைய முடியும்.

தாவீது அரசன் “ என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது“ என கூறியது போல நம் குற்றங்களையும், பாவங்களையும் சிந்திப்போம். நன்மைகளை மட்டுமே செய்து வந்த இயேசுவுக்கே சிலுவை மரணம் வழங்கினார்கள் யூதகுலத்தினர், காரணம் பொறாமை, சாதி இனவெறி, பதவிவெறி. இன்று நாமும் பல இழிவான காரணங்களுக்கான எத்தனையோ பேரின் உள்ளங்களை சாகடிக்கிறோம். இவை அனைத்தும் இயேசுவுக்கே செய்யும் செயல் என உணருகிறோமா? இனியாவது அவர் சாயலாக உள்ள மனித குலத்தில் இயேசுவை காண்போம்.

ஏழை எளியோருக்கு இருப்பதை கொடுப்போம், பசியால் மடிவோரை தடுப்போம், தவறு செய்தால் தண்டனை என்பதை விட்டு அவர் திருந்திட நமது அன்பினை தருவோம், தங்கிட இல்லம், உடுத்துவதற்கு உடை உவப்புடன் வழங்குவோம் மலை பிரசங்கத்தில் இறைமகன் உரைத்த வாழ்வு தரும் இறைவார்த்தைகளை மனதில் இருத்துவோம்.

அருட்சகோதரி. ஆலிஸ் பிரான்சிஸ், கும்பகோணம்.
Tags:    

Similar News