ஆன்மிகம்
நீங்கள் அசைக்கப்படுவதில்லை

நீங்கள் அசைக்கப்படுவதில்லை

Published On 2019-07-20 05:04 GMT   |   Update On 2019-07-20 05:04 GMT
இவ்வுலகில் எவ்வளவு நாம் உபத்திரவத்தின் வழியாய் கடந்து போனாலும் உள்ளத்திற்குள் தேவன் கொடுக்கிற சந்தோஷம் ஒருவருக்கு இருக்குமானால் அந்த சந்தோஷம் அந்த நபருடைய உள்ளத்தை பூரிப்பாக்கும்.
‘கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிற படியால் நான் அசைக்கப்படுவதில்லை’. சங்.16:8

இந்த வசனத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்போது மிகவும் ஆசீர்வாதமானவைகளை ஆண்டவர் தம்முடைய வசனத்தில் உள்ளடக்கி வைத்திருக்கிறார்.

தேவனுடைய தாசனாகிய தாவீது நம்மைப்போல மாம்சமும், ரத்தமும் உடையவராக வாழ்ந்து மரித்தவர். அவர் ஆண்டவரை பலவிதங்களில் ருசித்து அனுபவப்பட்ட ஒரு வல்லமையுள்ள ஊழியக்காரர். அவர் சொல்லுகிற வார்த்தைதான் ‘நான் அசைக்கப்படுவதில்லை’.

பாடுகளும் உபத்திரவங்களும் நிறைந்த இவ்வுலகத்தில் பலவிதங்களில் நாம் அசைக்கப்படக்கூடிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டு விடுகிறோம். அவ்வேளைகளில் நம்முடைய உள்ளான மனுஷனில் பெலகீனமும், ஆத்மாவில் சோர்வும், ஆவியில் கலக்கமும், பயமும் உண்டாகி தேவ பிரசன்னத்தையும் இழக்க நேரிடுகிறது.

உங்களுக்கு முன் ஆண்டவரை நிறுத்துங்கள்

உன்னதமான தேவனுடைய ஊழியக்காரனாகிய தாவீது சொல்கிறார், ‘ஆண்டவரை எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்’. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இவ்வுலக வாழ்வில் நமக்கு முன்பாக வைக்க வேண்டியவைகளைக் குறித்து நாம் மிகவும் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சிலர் எப்பொழுதும் தங்களுக்கு முன்பாக பணத்தையும், பொருளாதாரத்தையும் உலகப் பிரகாரமான சொத்துக்களையுமே நிறுத்தி வைத்து அவைகளின் மேலே கண்ணோக்கமாய் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் தாங்கள் விசுவாசிகள் என்ற ஸ்தானத்தில் இருந்தாலும், தான் தேவனுடைய பிள்ளை என்பதை மறந்து, உலகத்தை தங்களுக்கு முன்பாக நிறுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு எப்போதும் உலகப் பிரகாரமான படிப்பையும், தங்கள் தொழிலையுமே தங்களுக்கு முன்பாக நிறுத்தி அவைகளில் மூழ்கிப் போய்க்கிடக்கிறார்கள்.

இவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்கு அவசியம். ஆகிலும் இவை அனைத்தும் சில காலங்கள் தோன்றி மறையக்கூடியவைதான். ஆனால் உங்களை உருவாக்கின ஆண்டவரை உங்களுக்கு முன்பாக நிறுத்தி அவரையே அனுதினமும் நோக்கிப் பார்ப்பீர்களேயானால் எந்த ஒரு எதிர்ப்பு சக்திகளும் உங்களை அசைக்க முடியாது என்பது நிச்சயம்.

ஆண்டவர் உங்களுக்கு முன்பாக நிற்பாரேயானால் உங்களுக்கு விரோதமாய் எழும்பி உங்களை தாக்க வருகிற சகல சத்துருவின் அம்புகளையும் ஆண்டவர் தாமே மடங்கடித்து உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் அல்லவா?, ஏனென்றால் அவர் யுத்தத்தில் வல்லவர்.

கர்த்தர் உங்களுக்கு முன்பாக நிற்பாரேயானால் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற சகல பொல்லாத ஆவிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்து தமது செட்டையின் கீழே அடைக்கலமாக்கி கொள்ளுவாரல்லவா?, ஏனெனில் அவரே நமக்கு அடைக்கலம்.

ஒரு சமயம் இயேசு கிறிஸ்துவினுடைய சீடர்கள் கடலில் பயணம் பண்ணிக் கொண்டிருந்தபோது நடுக்கடலில் எதிர்காற்று அவர்களை தாக்கினபடியினால் அவர்கள் சென்ற படகு அவைகளினால் அலைக்கழிக்கப்பட்டது. அவ்வேளையில்தானே இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடத்திற்கு வந்து அவர்கள் படகில் ஏறினார். அவர் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. மத்தேயு 14:32

இயேசுவின் சீடர்களை அலைக்கழிக்கச் செய்த எதிர்காற்றை மேற்கொள்ள இயேசு அவர்களுக்கு முன்பதாக வந்து நின்றார். அவ்வேளையில் தானே அவர்களை எதிர்த்த காற்று அவர்களை விட்டு கடந்து போனது.

இதைப்போல் உங்கள் வாழ்வில் தேவபிள்ளை என்ற ஸ்தானத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், உங்கள் ஆவிக்குரிய பயணத்திற்கு விரோதமாக அவ்வப்போது இப்படிப்பட்ட பிரச்சினைகள், போராட்டம், வியாதி, கடன்பாரம், வேலையில்லாத நிலைமை பல ஆண்டுகளாய் திருமணமாகாத தடைகள் இன்னும் அநேக உபத்திரவங்களாகிய எதிர் காற்றுகள், உங்கள் இறைநம்பிக்கையை தாக்க நேரிடும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வரும்போது நம்முடைய சுயஞானத்தை நமக்கு முன்பாக நிறுத்திவிடாமல் உங்களையும் என்னையும் உருவாக்கின நம் அருமை இரட்சகரை உங்களுக்கு முன்பதாக நிறுத்தி விடுங்கள். அவரே உங்களுக்கு முன்னதாகப் போய் சகல கோணலான பாதைகள் எல்லாவற்றையும் செம்மையாக்குவார்.

‘ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது’. சங்கீதம் 16:9

ஆண்டவரை நமக்கு முன்பாக நிறுத்தி அவரையே நாம் நோக்கிக் கொண்டிருக்கையில் நாம் உலகத்தாலும், சாத்தானாலும் அசைக்கப்படாத ஜீவியம் செய்யமுடியும். ஆண்டவர் நமக்கு முன்பாக இருப்பாரேயானால் நம்முடைய உள்ளம் அவரது சந்தோஷத்தால் பூரிக்கும் என்று தாவீது சொல்கிறார்.

இவ்வுலகில் எவ்வளவு நாம் உபத்திரவத்தின் வழியாய் கடந்து போனாலும் உள்ளத்திற்குள் தேவன் கொடுக்கிற சந்தோஷம் ஒருவருக்கு இருக்குமானால் அந்த சந்தோஷம் அந்த நபருடைய உள்ளத்தை பூரிப்பாக்கும். அப்படிப்பட்டவர்கள் எத்தனை உபத்திரவத்தின் வழியாய் கடந்து போனாலும் அவர்களுடைய முகத்தில் ஒரு தெய்வீக சந்தோஷம் இருப்பதைக் காணலாம்.

ஒரு மனுஷனுக்கு எவ்வளவு ஆஸ்தியும் சொத்தும் இருந்தாலும் சமாதானம், சந்தோஷம் இல்லையென்றால் இவ்வுலகில் வாழ்வது வீணாயிருக்கும். உலகம் தரக்கூடாத சந்தோஷத்தை தருகிற கர்த்தரிடத்தில் பரிபூரணமாய் திரும்பி, உங்கள் எதிர்காலத்தை அவருடைய கரத்தில் அர்ப்பணித்து வேதவசனத்தை மாத்திரம் பிடித்துக் கொண்டு சந்தோஷத்தோடே ஆண்டவரை அனுதினமும் முன்பாக நிறுத்தி அவருடைய சித்தத்திற்கு உங்களை அர்ப்பணியுங்கள்.

சகோ ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
Tags:    

Similar News