ஆணவத்தை, கயமையை, அநியாயத்தை, சுயநலத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருந்த அந்த சிலுவையில் அவற்றை எல்லாம் அறைந்து விட்டு தாழ்ச்சியுடன் என்னை பின்பற்றுங்கள் என்கிறார்.
இன்று சிலுவை என்பது நமக்கு மீட்பின் சின்னம். வாழ்வின் பாதை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்டவர் ஏசு கூறியபொழுது அது அவமானத்தின் சின்னம். சிலுவை என்று அவர் கூறியவுடன் அவர்கள் எண்ணத்தில் மரண வலிகளுடன் கூடிய சாவு. பொது வெளியில் நிர்வாணமாக்கப்பட்டு நடத்தப்படுதல் மற்றும் அவமானங்களும் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும்.
யாரும் விரும்பக்கூடிய ஒரு அடையாளம் அல்ல. அவர்களால் நம்மைபோல் ஒரு ஆன்மிக பார்வையில் சிலுவையை பார்த்திருக்க முடியாது. அவர்களை பொறுத்வரை சிலுவை உரோமானியர்கள் அடிமைப்படுத்திய நாட்டுமக்களை அடக்க பயன்படுத்திய ஒரு அடக்குமுறை கருவி. ஆதிக்க சமூகத்தின் ஆணவத்தை காட்டும் கருவி. ஒரு கொடூரனின் கையில் இருந்த கொடிய ஆயுதம். சிலுவை என்றாலே சாட்டையடி, சுத்தியல், ஆணி மற்றும் தொங்கவிடப்படுகின்ற மரம்தான் நினைவுக்கு வந்திருக்க முடியும்.
அதைத்தான் ஆண்டவர் தன்னுடைய சீடர்களுக்கு நிபந்தனையாய் வைக்கிறார். அது ஒரு பயங்கரமான நிபந்தனை. ஆணவத்தை, கயமையை, அநியாயத்தை, சுயநலத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருந்த அந்த சிலுவையில் அவற்றை எல்லாம் அறைந்து விட்டு தாழ்ச்சியுடன் என்னை பின்பற்றுங்கள் என்கிறார்.