ஆன்மிகம்

இறைநம்பிக்கையின் வெளிப்பாடே மகிழ்ச்சி

Published On 2019-06-28 03:39 GMT   |   Update On 2019-06-28 03:39 GMT
தற்காலிக பொருள்கள், பணம், பதவி சிற்றின்பங்கள் மேல் நம்பிக்கை வைப்பவன் வாழ்க்கை சோகத்தால் நிறைந்தது. ஆனால் கடவுள் மேல் நம்பிக்கை வைப்பவன் வாழ்க்கை நிரந்தரமான மகிழ்ச்சியை கொடுக்கும்
ஒரு அழகிய விடுமுறை நாளின் மாலைப் பொழுதில் மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு சோகம் ஆட்கொண்டது. என்னவென்று ஆராய்ந்து பார்க்க மனம் துடித்தது. வாழ்க்கையில் இன்னும் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றியது. இன்னும் அதிகமாக சம்பாதித்திருந்தால், வேறு வேலை செய்திருந்தால், பெரிய வீடு கட்டியிருந்தால், வேறு எங்காவது வாழ்ந்திருந்தால், இன்னும் படித்திருந்தால்... என்று நிறைய கேள்விகள் மனதுக்குள் வந்து வந்து இன்னும் சோகத்தை ஆழமாக பதித்து விட்டு சென்றன. கவலை மனதை சிறைப்படுத்துவதற்கு முன் சட்டென எழுந்து நண்பர் வீட்டுக்கு புறப்பட்டேன்.

நண்பனின் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் புதிய செக்யூரிட்டி ஒருவரை பார்த்தேன். கம்பீரமான தோற்றம், நாற்பது வயது இருக்கும் அவருக்கு. எனக்கு அறிமுகம் இல்லாதவர், ஆதலால் நான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு யாரை பார்க்க வேண்டும் என்று சொல்லி அவரிடம் நலம் விசாரித்தேன். கம்பீரமாக இருந்தவர் சற்று தடுமாறினார். கண்கள் கலங்க ஆரம்பித்தன. இவ்வளவு நேரம் கவுரவ தோற்றத்துடன் இருந்த அவர் முகம் சுருங்கி சோகத்தின் உச்சத்தை தொட்டது. என்ன பிரச்சினையோ, உதவி ஏதாவது தேவைப்படுகிறதோ, பண தட்டுப்பாடு இருக்குமோ என்று பல கேள்விகள் எனக்குள் வந்து போயின.

“சொல்லுங்க...” என்றேன்.

“என் மகளுக்கு.......” என்று சொல்லி அப்படியே இரண்டு நிமிடம் இடைவெளி விட்டார். அவர் இதயம் நொறுங்கி நின்றது எனக்கு புரிந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். பின்னர் அவருடைய மகளுக்கு ஒரு கொடிய நோய் தாக்கியுள்ளது என்றும் அதை சரி செய்ய அவர் தினமும் படும் பாடுகள் மிகவும் வேதனையானது என்றும் அறிந்து கொண்டேன். அவரது துன்பத்தை அறிந்த எனக்கு இன்னும் சோகம் அதிகமானது ஆனால் எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஆரம்பித்தது. என்னை போன்ற இன்னொருவர் எவ்வளவு வேதனையில் வாழ்கிறார் என்றும் ஆனால் நானோ எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் ஏதோ இழந்தது போல வாழ்கிறேனே என்றும் கடவுள் கற்று கொடுத்தார்.

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன் என்று வேதத்தில் (பிலிப்பியர் 4:4) கூறப்பட்டுள்ளது. எல்லோரும் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுவார்கள், ஆனால் பல சூழ்நிலைகளின் மத்தியில் அப்படி இருக்க முடிவதில்லை. நமது நம்பிக்கை எதன் மீது வைத்துள்ளோமோ அதை பொறுத்தே நமக்கு சந்தோஷம் கிடைக்கும். ஒரு வேளை நமது நம்பிக்கை உலக பிரகாரமான பொருள்களின் மேல் வைத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

பணத்தின் மேல் நம்பிக்கை வைத்தால் அது நம்மை விட்டு போகும் போது நாம் வாழ்க்கையில் எல்லாம் இழந்தது போல தோன்றும். பணக்காரன் தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்றால் பணக்கார நாடுகளில் ஏன் இன்னும் மக்கள் மகிழ்ச்சியில்லாதவர்களாக இருக்கிறார்கள். மகிழ்ச்சி என்பது அகம் சார்ந்தது. அதை கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும். ஆம், கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் மகிழ்ச்சி உள்ளவர்களாக காணப்படுகிறார்கள். நாம் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும் கடவுள் மேல் நம்பிக்கை வைத்திருந்தால் நிச்சயமாக சந்தோஷமாக வாழ முடியும்.

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம் (சங்கீதம் 118:24). கர்த்தர் நாம் எல்லோரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார், அதற்காக தான் அவர் நமக்கு ஆயுசு நாட்களை கொடுத்திருக்கிறார்.

ஏழைகள் எப்படி மகிழ முடியும் என்று அன்னை தெரசாவிடம் கேட்டபோது, “பணம் மட்டுமே மகிழ்வைத் தரும் என்பது தலைமுறைக்கு தரப்பட்டிருக்கும் தவறான பாடம்” என்று கூறினார். மற்றும் தன் பணியாளர்களிடத்தில் ஒரு முறை அவர்கள் இப்படி சொன்னார்கள். “ஏழ்மை என்பது அழகானதல்ல, ஆனால் அந்த ஏழ்மையிலும் வாழ்வின் மீது மனிதன் வைத்திருக்கும் புன்னகை கலந்த நம்பிக்கை மிக பெரிது”.

தற்காலிக பொருள்கள், பணம், பதவி சிற்றின்பங்கள் மேல் நம்பிக்கை வைப்பவன் வாழ்க்கை சோகத்தால் நிறைந்தது. ஆனால் கடவுள் மேல் நம்பிக்கை வைப்பவன் வாழ்க்கை நிரந்தரமான மகிழ்ச்சியை கொடுக்கும் - எவ்வித சூழ்நிலையிலும்.

எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்பது கடவுள் நமக்கு கற்றுத்தந்த பாடம், அப்படியானால் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மற்றவர்களின் வெற்றியும் நாம் கொண்டாடப்பட வேண்டியதே. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் மற்றவர்களுக்காக வாழ்ந்தார். தனக்காக அவர் எதையும் செய்யவில்லை. பாவத்தில் விழுந்த மக்கள் மனம் திருந்திய போதும், நோயாளிகள் குணமுற்ற போதும் அவர் மகிழ்ந்தார் ஏனென்றால் அதற்காக தானே அவர் பூமிக்கு மனிதனாக வந்தார். ஆதலால் வீணாக கவலைப்படாமல் இறைநம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வாழ்வோமா?

துலீப் தாமஸ், சென்னை.
Tags:    

Similar News