ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: பாஸ்கா விழா

Published On 2019-04-13 05:07 GMT   |   Update On 2019-04-13 05:07 GMT
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இன்னும் சில நாட்களில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நாமும் இயேசுவுக்காக பஸ்கா விழாவினை கொண்டாட ஆயத்தமாவோம் ஆமென்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக வாழ்ந்து, கடவுளின் கருணையால் அதில் இருந்து மீண்டு வந்ததை பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இதைத்தான் பாஸ்கா விழா என்று சொல்லப்படுகிறது.

இந்த பாஸ்கா விழாவை கொண்டாடுவதற்காக தனது சீடர்களுடன் எருசலேம் நகருக்கு செல்ல இயேசு திட்டமிடுகிறார். இதை கேள்விப்பட்ட மக்கள், மாபெரும் போதகராக, மெசியாவாக, அற்புதங்கள் நிகழ்த்தும் கடவுளின் மகனாக வருகிறார் என்றும், இனி அவர்தான் தங்களுக்கு உண்மையான ராஜாவாகப் போகிறவர் என்றும் முடிவு செய்தனர்.

இந்த பாஸ்கா விழாவுக்கு ஒருவார காலத்திற்கு முன்னர்தான், இறந்து அடக்கம் செய்யப்பட்டு 3 நாட்கள் கடந்து விட்ட தனது நண்பர் லாசர் என்பவரை இயேசு உயிருடன் மீண்டு வர செய்தார். இதற்கு சாட்சியாக லாசர் தங்கள் கண் முன்னாள் நிற்பதையும் கண்டு யூத தலைமை சங்கத்தினர் கோபமடைந் திருந்தனர்.

இந்த வேளையில் தான் யூதமத அதிகார வர்க்கமாக இருந்த பரிசேயர்களும், சதுசேயர்களும், இவர்களால் நிரம்பி வழிந்த யூத தலைமை சங்கமும் கொதித்து எழுந்தது. எப்படியாவது இயேசுவை யூதர்களுக்கு எதிரானவராக சித்தரித்து அவரை கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.

இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கி சென்று கொண்டிருக்கையில் ஒலிவமலை அருகில் இருந்த பெத்பகு என்னும் ஊருக்கு வந்த போது இரு சீடர்களை அழைத்து, ‘நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் எதேனும் சொன்னால், இவை ஆண்டவருக்கு தேவை எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பி விடுவார்’ என்றார். சீடர்கள் போய் தங்களுக்கு இயேசு சொன்னபடியே செய்தார்கள். பின்னர் கழுதையின் மேல் தங்களின் மேலாடைகளை போட்டு இயேசுவை அதில் அமரச் செய்தார்கள்.

பின்னர் இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்த போது பெருந்திரளான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தங்களிடம் உள்ள ஆடைகளை வழிநெடுகிலும் விரித்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இப்படியாக இயேசுவுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு வரலாறாக மாறியது என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய 4 முக்கிய நற்செய்தியாளர்களும் வேதாகமத்தில் இயேசுவை பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.

எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இன்னும் சில நாட்களில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நாமும் இயேசுவுக்காக பஸ்கா விழாவினை கொண்டாட ஆயத்தமாவோம் ஆமென்.

பாஸ்டர்.ரபிபிரபு, காங்கேயம்,
Tags:    

Similar News