ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: மனம் திரும்புதல்

Published On 2019-03-11 03:39 GMT   |   Update On 2019-03-11 03:39 GMT
தேடி வரும் இறைவனோடு இணைய நமது மனித இயல்புகளை களைந்து ஆவிக்குரிய இயல்பை பெற பாவங்களுக்காக மனவருந்துவோம்.
காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்(மாற்.1:15). இயேசுவின் நற்செய்தி பணியின் தொடக்க முழக்கமே மனமாற்றத்திற்கான அழைப்பாகவே இருக்கிறது. ஏனெனில் இறையாட்சி இவ்வுலகில் மலர வேண்டுமாயின் மனவருத்தமும், பாவமன்னிப்பும் மிகவும் அவசிமாகிறது.

எனவேதான் கடவுள் வடிவில் விளங்கிய அவர் கடவுளுக்கு  இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாக கருதாமல் மனிதரானார். அவரது வருகை இறையாட்சி வருகையாக இருந்தது. பாவத்தை போக்கும் ஆட்டுக்குட்டி ஆனார்(யோவா (1:29). மனிதருக்காக தமது ரத்தத்தை சிந்தினார். தன்னையே பரிகார பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். (உரோ 5:6-8). சிலுவை சாவில் வழியாக பாவத்தின் மீதும் அதன் விளைவாக ஏற்படும் சாவின் மீதும் வெற்றிக்கண்டார். இறைவனோடு நம்மை ஒப்புவாக்கினார்(உரோ5:10).

காணாமல் போன ஆட்டை தேடியதை போல காணாமல் போன மகனை ஏக்கத்தோடு தேடியதை போல இறைவன் நம்மை தேடி வருகின்றார். தேடி வரும் இறைவனோடு இணைய நமது மனித இயல்புகளை களைந்து ஆவிக்குரிய இயல்பை பெற பாவங்களுக்காக மனவருந்துவோம். எழுந்து என் தந்தையிடம் போவேன் என கூறிச்சென்ற ஊதாரி மகனைப்போல தந்தை இறைவனிடம் திரும்புவோம். கடவுளே உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும், உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களை துடைத்தருளும் (திபா.51:1) மன்றாடுவோம்.

அருட்தந்தை. அல்போன்ஸ், பூண்டி.
Tags:    

Similar News