ஆன்மிகம்

இயேசு சொன்ன உவமைகள் : திராட்சைத் தோட்ட உரிமையாளன்

Published On 2018-11-15 04:09 GMT   |   Update On 2018-11-15 04:09 GMT
தனது பணியைச் செய்பவர்களை இறைவன் வெறுமனே அனுப்புவதில்லை. அவர்களுக்கு நிச்சயம் பரிசுகளைக் கொடுக்கிறார்.
மத்தேயு 20 : 1..16

“விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள்.

மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார்.

எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.

அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள்.

அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்
Tags:    

Similar News