ஆன்மிகம்

இயேசு சொன்ன உவமைகள்: நேர்மையற்ற பணியாளன்

Published On 2018-11-12 09:44 GMT   |   Update On 2018-11-12 09:44 GMT
ஒளியின் பிள்ளைகள் ஆன்மீக வாழ்வின் வீழ்ச்சியின் போது தங்கள் ஆன்மீக வெளிச்சத்தைப் பயன்படுத்தி விண்ணகத்துக்கு உரியவற்றைத் தேடுவதில்லை.
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு,

‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.

அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார்.

பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை⁕ கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

“ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

இயேசு சொன்ன உவமைகளில் அதிகம் அறியப்படாத, அலசப்படாத‌ உவமை இது எனலாம். இவ்வுலகின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது விண்ணக வாழ்க்கையைக் குறித்துக் கவலைப்படாத, மண்ணுலக வாழ்க்கையே முக்கியம் எனக் கருதி வாழும் மனிதர்களை.

ஒளியின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது இறைமகன் இயேசுவின் போதனைகளைக் கேட்டு, ஆன்மீக வெளிச்சத்தில் நடப்பவர்களை. இவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாட்டை இயேசு பேசுகிறார்.

இவ்வுலக மக்கள் ஒரு நெருக்கடி வரும்போது தங்களுடைய புத்தியையெல்லாம் செலவழித்து அந்த சிக்கலிலிருந்து வெளிவர முயல்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

ஆனால் ஒளியின் பிள்ளைகள் ஆன்மீக வாழ்வின் வீழ்ச்சியின் போது தங்கள் ஆன்மீக வெளிச்சத்தைப் பயன்படுத்தி விண்ணகத்துக்கு உரியவற்றைத் தேடுவதில்லை.

இந்த உலகின் செல்வங்கள் அழிந்து போகக் கூடியவை அவற்றால் எந்த பயனும் இல்லை. ஆனால் அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக வாழ்வுக்கு உரியவற்றைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்வதற்காக இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.

Tags:    

Similar News