ஆன்மிகம்

இயேசுவே இறை இரக்கத்தின் சாட்சி

Published On 2018-10-19 03:14 GMT   |   Update On 2018-10-19 03:14 GMT
கடவுள், அரவணைப்பவராக, இரக்கமே வடிவானவராக உள்ளார். இதனை நம்பி பிறரிடத்திலும் இறைவனின் இரக்கத்தை பதிவு செய்து வாழும் மக்களே இயேசுவின் தாகத்தை தணித்த மக்கள்.
கடவுள், அரவணைப்பவராக, இரக்கமே வடிவானவராக உள்ளார். இதனை நம்பி பிறரிடத்திலும் இறைவனின் இரக்கத்தை பதிவு செய்து வாழும் மக்களே இயேசுவின் தாகத்தை தணித்த மக்கள். இயேசு இந்த உலகத்திற்கு வந்தது நல்லவர்களை மீட்பதற்காக அல்ல. மாறாக, பாவிகளை அன்பு செய்து மீட்பதற்காகவே வந்தார்.

சமாரிய பெண்ணுடனான உரையாடல் வழியாக தான் யூதர்களை மட்டுமல்ல, உலகத்தவர் அனைவரையும் அன்பு செய்யும் ஒப்பற்ற இறைவன் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, காணாமல் போன ஆட்டினை தேடியலைந்து கண்டு மகிழும் ஆயனாக இறைவன் தன்னை வெளிப்படுத்துகின்றார். (மத்தேயு 18:12-13) ஆம், இறைவன் பாவிகளை மட்டுமல்ல, பாவத்தையே வெறுப்பவராக உள்ளார்.

இயேசு தன் மந்தையை, அரவணைப்பை விட்டு தவிக்கும் ஆட்டினை தேடியலைந்து மீட்டெடுத்தார். அவ்வாறு மீட்டெடுத்த ஆட்டினை தண்டிக்காமல் அதனை தன் தோள் மேல் போட்டுக்கொண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். பிறரையும் தன் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள அழைத்தார். ஆம். ஒரு பாவி மனம் திரும்புதலை குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும். (லூக் 15:7)

இந்த புரிதல் இன்று நேற்று எழுந்தது இல்லை. மாறாக இறைவனின் அழைப்பிற்கு செவி சாய்த்து தன் ஊர், உறவை விட்டு, நிச்சயமற்ற நிலையில் அழைத்தவரின் மீது நம்பிக்கை கொண்டு அன்று தொடங்கிய ஆபிரகாமின் பயணத்தில் எழுந்தது. இயேசுவின் உயிர்ப்பில் உறுதிகொண்ட நம் விசுவாச பயணம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இறைவனை பற்றிய புரிதல் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

நம் வானக தந்தையாக, இரக்கத்தின் தேவனாக, நண்பனுக்காக உயிர் தரும் நண்பனாக நம்மிடையே அறிமுகம் செய்து, அந்த இறைவனின் மகனாக தந்தையின் இரக்கத்தை எடுத்து கூறிய தன்னையே கையளித்த இறைவன்தான் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஆம், வானக தந்தையின் இரக்கத்தின் முகமாக நம்மோடு வாழ்ந்தவர் தான் இயேசு. அவர், இறை தந்தையின் இரக்கத்தை வாழ்ந்து காண்பித்தார். இன்று நம்மையும் இறை இரக்கத்தின் சாட்சியாக வாழ அழைக்கின்றார். இரக்கத்தின் திருமுகமான இயேசுவை போன்று பாவிகளை அல்ல, பாவத்தை வெறுத்து பிறரை ஏற்று அன்பு செய்து வாழ்வோம்.

அருட்சகோதரர். செபஸ்டின் அருண் சிமியோன், சலேசியன் சபை, சவேரியார் பாளையம் பங்கு.
Tags:    

Similar News