ஆன்மிகம்

கடவுள் நம்மில் செயலாற்றுகிறார்

Published On 2018-10-03 05:10 GMT   |   Update On 2018-10-03 05:10 GMT
“கடவுளின் அன்புச்செயலை செய்ய எந்த தடை வந்தாலும் அதைத்தாண்டி சென்று பிறரன்பு பணி செய்வேன்” என்கிறார் அன்னை தெரசா.
தவக்காலம் என்பது மனித-இறை உறவுக்கு நம்மை அழைத்து செல்லும் காலம். இது அருளின் காலம், நம் மனமாற்றத்தின் காலம். நற்செயல்கள் செய்ய நம்மை தூண்டுகிற காலம். இந்த அரிய தவக்காலத்தில் தவம், ஜெபம் போன்ற நற்செயல்களில் தவறாமல் நாம் ஈடுபட வேண்டும்.

“செத்துப்போன குதிரையை விட நொண்டியான கழுதையே மேல்” என்று இத்தாலி நாட்டில் ஒரு பழமொழி உண்டு. உடலின் ஊனம் என்பது பிறரன்பு பணிக்கு எப்போதும் தடையில்லை. இதனை நாம் உணர்ந்து சிந்தித்து செயல்பட இந்த தவக்காலம் நம்மை தூண்டுகிறது. கடவுளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும், கடவுள் நம்மில் செயலாற்றுகிறார் என்ற நம்பிக்கை உண்டு.

உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே (யாக்கோபு 2:26) கடவுள் எப்போதும் நம்மில் செயலாற்றுகிறார். “கடவுளின் அன்புச்செயலை செய்ய எந்த தடை வந்தாலும் அதைத்தாண்டி சென்று பிறரன்பு பணி செய்வேன்” என்கிறார் அன்னை தெரசா.

சட்டங்கள் மனிதருக்காக; மனிதர் சட்ட திட்டங்களுக்காக அல்ல. ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அல்ல. ஆயினும் மனிதன் எப்படியும் வாழலாம் என்றல்ல; மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்டவன் ஆகிறான். அந்நியதியின் படி வாழ்கின்றவர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.

எனவே கடவுள் நம்மில் செயலாற்றுகிறார் என்பதை நம்பும் அனைவரும் கடவுளின் அன்பு செயலை செய்ய வேண்டும். எப்படி? உனக்கு அடுத்து இருப்பவரிடம் அன்பு கூர்வாயாக! உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள் (மத் 5:43) என்ற இயேசுவின் பொன் மொழிகளை கடைபிடித்து வாழ வேண்டும். அதன் மூலம் கடவுள் நம்மில் எப்போதும் செயலாற்றுவார்.

இந்த நம்பிக்கையுடனும், துணிவுடனும் பயணித்திட முயற்சிப்போம். இந்த தவக்கால வாழ்நாளில் சாதனையாளர்கள் ஆவோம்.

அருட்திரு. எஸ்.செந்தூரியன், வக்கம்பட்டி. 
Tags:    

Similar News