ஆன்மிகம்

கடவுளை சகமனிதரில் காண்போம்

Published On 2018-10-01 05:49 GMT   |   Update On 2018-10-01 05:49 GMT
இறைவனை ஆலயம், ஆலயமாகச் சென்று தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, கண்ணால் காண முடியாத கடவுளை அவர் சாயலில் விளங்குகின்ற சகமனிதரில் பார்த்து அன்பு செய்வோம்.
இறைவனை ஆலயம், ஆலயமாகச் சென்று தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, கண்ணால் காண முடியாத கடவுளை அவர் சாயலில் விளங்குகின்ற சகமனிதரில் பார்த்து அன்பு செய்வோம். பல அர்த்தமிக்க உணர்வுப்பூர்வமான அனுபவங்கள் நமது வாழ்விலும் ஏற்பட்டிருக்கும். நாம் பஸ்சில் பயணம் செய்தபோது வயது முதிர்ந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்கலாம்.

உடல் ஊனமுற்றவர்கள் தேவையில் இருக்கும் போது நாமாக வந்து உதவியிருக்கலாம். படிக்கிற மாணவர்கள் தங்களோடு உள்ள பிற மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்திருக்கலாம். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வேதனையோடு படுத்திருக்கும்போது, ஆறுதல் வார்த்தைகள் சொல்லியிருக்கலாம். இதுபோன்ற செயல்பாடுகளில் எல்லாம் நாம் கடவுளை பிரதிபலித்திருக்கிறோம். தவக்காலத்தில் இன்றைய நாள் சிந்தனை “கடவுளை ஆலயத்திலும், சட்ட திட்டத்திலும் காண்பதை விட சக மனிதரில் காண்போம்” என்றே அழைக்கின்றது.

நாம் ஒவ்வொருவரும் நம்மை அன்பு செய்வதற்கு முயற்சி எடுக்கின்றோம். அதேபோன்று கடவுளையும் அன்பு செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். பிறர்மீது கொண்ட அன்பிலும், அக்கறையிலுமே இறை அன்பு வெளிப்படுகின்றது. ஆங்கிலக் கவிஞன் செஸ்டர்டன் இவ்வாறு கூறுவார், “நம்மில் பலருக்கு கடவுளை நேசிப்பதில் எவ்விதமான சிக்கலுமில்லை. மனிதர்களை நேசிப்பதில் தான் சிக்கல் இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக அருகில் இருக்கின்ற மனிதர்களை அன்பு செய்வதிலே மாபெரும் சிக்கல் உள்ளது. கடவுளோடு கொண்டிருக்கின்ற அன்பு, சிந்தனைப் பூர்வமாக இருப்பதால் சிக்கல் தெரிவதில்லை. ஆனால் மனிதர்களை அன்பு செய்வது, அனுபவ பூர்வமாக இருப்பதால் சிக்கல் தெரிகின்றது” என்பார். ஆதலால் கடவுளோடு கொண்டுள்ள உறவை கண்ணால் காணுகின்ற மனிதர்களிடம் காட்டும் அன்பில், அக்கறையில் வெளிப்படுத்துவோம்.

நமது அருகாமை இல்லங்களில் மாபெரும் நெருக்கடிகளுக்குள்ளும், மன இறுக்கங்களுக்குள்ளும் உள்ளாகி துன்புறும் மனிதர்களை தேடிச் செல்வோம். யாருக்கு என் அன்பு தேவைப்படுகின்றது என்பதனை குறித்துக் கொள்வோம். அப்படி வாடும் மனிதர்களை இனம் கண்டு அவரில் இயேசுவைக் காண்போம். பொருளைக் கொடுப்பதைவிட, நமது உடனிருப்பை அவர்களுக்கு அளிப்போம். “ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்” என்பதனை உதட்டளவில் உச்சரிக்காது, உள்ளத்தளவில் வாழ்ந்து காட்டுவோம். நாம் வாழும் இல்லம், இறைவனின் இல்லமாக, சக மனிதரில் இயேசுவைக் கண்டுபிடிப்போம்.

அருட்பணி. குருசு கார்மல்,

தூய சவேரியார் பேராலயம்,

கோட்டார், நாகர்கோவில். 
Tags:    

Similar News