ஆன்மிகம்

ஏசு கிறிஸ்துவை மனதில் நினைத்து வாழ்வோம்

Published On 2018-08-27 04:11 GMT   |   Update On 2018-08-27 04:11 GMT
எதிர்ப்புகளிலும், சூழ்நிலை எதிராக இருந்த போதும் பொறுமையோடு வாழ்ந்த ஏசு கிறிஸ்துவை மனதில் நினைத்து வாழ்வோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்.
ஏசு கிறிஸ்துவின் பாடு, மரண காலங்களில் இன்று நாம் அவசரத்திற்கு என்ன அவசியம் இருக்கிறது என்று பார்க்கலாம். நாம் வாழும் இந்த உலகில் எங்கு பார்த்தாலும் அவசர அவசரமாய் ஜனங்கள் ஓடித்திரிவதையும், அதனால் அவர்கள் அவஸ்தைபடுவதையும் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

பரிசுத்த வேதாகமத்தில் 2 சாமுவேல் 4:4-ல் ஒரு சம்பவத்தை காணலாம். சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான். சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிற போது அவன் 5 வயதுள்ளவனாயிருந்தான். அப்போது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள். அவர் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்.

அவனுக்கு மேவிபோசேத் என்று பேர். வாழ்வில் ஒரு சில மனிதர்களுடைய அவசரம் அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் செயல்படாதவராக, முடவராக மாற்றிவிடும். தாதி என்றால் வளர்ப்பு தாய் என்று அர்த்தம். ஒரு வளர்ப்பு தாயின் அவசரம், அந்த சிறு குழந்தையின் எதிர்காலத்தை பாதித்துவிட்டது. இந்த சிறு குழந்தையை பெற்றவர்கள், சுற்றத்தார் எவ்வளவு வருந்தி இருப்பார்கள். என் தாதி அவசரப்படாமல் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலை வராமல் இருந்திருக்குமே என்று அந்த சிறுவனே நினைத்து இருக்கலாம்.

இன்றும் ஏராளமானோர் இப்படித்தான் யோசித்து வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். எதிலுமே அவசரம் வேண்டாம். நீ சந்தோஷமாக இருக்கும் போதும், மிகுந்த வேதனையோடு இருக்கும் போதும், அவசரப்படாதே. சந்தோஷமாக இருக்கும் போது கொடுக்கும் வாக்குறுதியும், வேதனையோடு இருக்கும் போது எடுக்கும் முடிவும் தவறாய் போவதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் அவசரம் வேண்டவே வேண்டாம்.

உங்களுடைய அவசரம் பிறரின் எதிர்காலத்தை பாழாக்கிவிடலாம். அவர்களுடைய எதிர்காலம் உங்களால் கண்ணீர் சிந்துகிறதாய், வருந்தக்கூடியதாய் காலமெல்லாம் துக்கப்படுகிறதாய் மாற்றிவிடலாம். இந்த சிறு குழந்தை அவனது மரண நாள் மட்டும் முடவனாய் வாழ்ந்து இறந்தான். ஒரு முடவனுடைய வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்ததே. நமது தொழிலிலும், வேலையிலும், வியாபாரத்திலும், வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் அவசரம் மட்டும் வேண்டாம் என்று அறிந்துகொள்வோம்.

எந்த சூழ்நிலையிலும் பொறுமையோடு செயல்படுவோம். பொறுமைக்கு அடையாளம் ஏசு கிறிஸ்துவே. அவர் சிலுவையில் பட்ட பாடுகளில் பொறுமையோடு இருந்தார். எதிர்ப்புகளிலும், சூழ்நிலை எதிராக இருந்த போதும் பொறுமையோடு வாழ்ந்த ஏசு கிறிஸ்துவை மனதில் நினைத்து வாழ்வோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்.

- போதகர் பவுல்ராஜ்.
Tags:    

Similar News