ஆன்மிகம்

ஏழைகளின் உரிமை

Published On 2018-07-14 03:56 GMT   |   Update On 2018-07-14 03:56 GMT
ஏழைகள் எத்தனைபேருக்கு கொடுக்க முடியும்? என்று கொடுப்பதை நிறுத்திக் கொள்வதை விட, 100 ஏழைகளில் ஒருவருக்காவது செய்வதை கடவுள் வரவேற்கிறார்.
தவக்காலத்தில் இயேசுபிரான் 3 முதன்மையான போதனைகளை முன் நிறுத்துகிறார். 1. அதிக ஜெபம். 2. அதிக தவம். 3. அதிக தர்மம்.

செல்வந்தர் ஒருவர் வழிபாட்டில் பங்கேற்று விட்டு, தனது காரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வழியில் மூதாட்டி ஒருவர் நாவல்பழம் விற்றுக்கொண்டு இருந்தார். செல்வந்தர் காரில் இருந்து இறங்கி அந்த மூதாட்டியிடம், நாவல் பழம் வாங்குவதற்காக பேரம் பேசினார். பின்னர் ஒரு படி பழத்தை வாங்கி கொண்டு காரில் புறப்பட்டார் அவர்.

அப்போது மூதாட்டி, ஒரு பெரிய நாவல்பழத்தை கார் கண்ணாடி மீது வீசினார். அப்போது செல்வந்தர் நாவல் பழம் வாங்கியதற்காக ரூ.20-க்கு பதிலாக ரூ.2 ஆயிரத்தை தவறுதலாக கொடுத்து விட்டதை உணர்ந்தார். பின்னர் காரில் இருந்து கீழே இறங்கி சென்று ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, ரூ.20-யை மூதாட்டியிடம் கொடுத்தார்.

மூதாட்டியை போல உழைத்து சம்பாதிப்பதில் உற்சாகம் வேண்டும். துன்புற்றாலும் பிறருடைய பொருளுக்கு எவ்வகையிலும் ஆசைபடக்கூடாது. நாம் துன்புற்றாலும், ஏழைகளுக்கு கொடுத்து உதவவேண்டும். இது தான் தர்மம். தர்மம் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. கடவுள் பிரதிபலன் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் துன்புறும் நபர்களுக்கு, நாம் துன்புற்றாலும் எத்தகைய எதிர்பார்ப்புமின்றி உதவி செய்யும் போது தான் இறைவன் நம்மை ஆசிர்வதிக்கிறார்.

வறியவருக்கு உதவுவது என்பது நாம் காட்டும் அனுதாபம் அல்ல. அது நம்முடைய கடமை என்பதை இயேசு பிரான் தெளிவுப்படுத்துகிறார். நாமே சம்பாதித்து இருந்தாலும், அதில் ஏழைகளுக்கும் உரிமையுண்டு என்பதையும் உணர்வது தான் ஒரு நல்ல மனிதருக்கு அடையாளம். வறண்ட நேரங்களில் வழங்குவதே வரவேற்கத்தக்கது.

எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்பதல்ல. இருப்பதில் ஒரு சிறு பகுதியையாவது பகிர்ந்து கொள்ளுதலே சிறந்த ஞானம். ஏழைகள் எத்தனைபேருக்கு கொடுக்க முடியும்? என்று கொடுப்பதை நிறுத்திக் கொள்வதை விட, 100 ஏழைகளில் ஒருவருக்காவது செய்வதை கடவுள் வரவேற்கிறார். செய்வோமா?

- குழந்தை, காணியிருப்பு.
Tags:    

Similar News