ஆன்மிகம்

அடிச்சுவடுகளை வைத்துப்போன கிறிஸ்து

Published On 2018-04-30 09:12 IST   |   Update On 2018-04-30 09:12:00 IST
கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மூலம் கிறிஸ்து விட்டுப்போன அடிச்சுவடுகளைக்குறித்து தியானிப்போம்.
கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மூலம் கிறிஸ்து விட்டுப்போன அடிச்சுவடுகளைக்குறித்து தியானிப்போம். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப்பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத்தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப்பின்வைத்துப்போனார்.

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும் போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். நாம் பாவங்களுக்குச்செத்து, நீதிக்குப்பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச்சிலுவையின் மேல் சுமந்தார்.

அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். கிறிஸ்துவின் நிமித்தம் வரும் பாடுகளை சகிப்பதே பாக்கியம் என்று வேதம் கூறுகிறது. ஒரு விசுவாசிக்குக் கிடைக்கும் மிகப்பெரிய சிலாக்கியம் கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக வரும் பாடுகளை அனுபவிப்பது ஆகும். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச்சுமந்தார்.

நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்று வேதம் கூறுகிறது.

நாம் பாவத்தின் வல்லமை, அதிகாரம் மற்றும் குற்ற உணர்வுகளின்றி முற்றிலும் விடுவிக்கப்படும்படியாக அவர் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். அவரை ஏற்றுக்கொண்டு அவரது ரத்தத்தினாலே கழுவப்பட்டவர்களாக தேவனிடத்தில் திரும்ப வழியையும் உண்டு பண்ணினார். அடிச்சுவடுகளை பின்பற்றி வரும்படி நமக்கும் அழைப்பைக்கொடுக்கிறார். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோ:14:6).தேவனிடத்தில் செல்ல அவரே வழி என்று வேதம் கூறுகிறது.

கிறிஸ்துவுக்காகவும், சுவிசேஷத்திற்காகவும் வருகிற பாடுகளை அர்ப்பணத்தோடு சகிப்பதே தேவன் நமக்கு வைத்துப்போன பாதை ஆகும். அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபி:12:2). இயேசுவானவர் சிலுவையை சுமந்து, பாடுகளை சகித்து, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பது போல நாமும் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். அவர் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்ற கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக

போதகர்-அமல்ராஜ் 

Similar News