ஆன்மிகம்

பாவ வாழ்வுக்கு பரிகாரம்

Published On 2018-04-24 09:57 IST   |   Update On 2018-04-24 09:57:00 IST
வாழ்வில், செல்வத்தை கொண்டு ஏழை, எளிய முதியோர்கள், அனாதைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வது, அந்த கடவுளுக்கே செய்தது போன்ற நன்மையை தேடி தரும்.
அரசர் ஒருவர், தன் பிறந்த நாள் பரிசாக, இந்த அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார். மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டனர். ஆனால் பெற்றோரை இழந்த அனாதை சிறுவன் ஒருவன் மட்டும் விலை உயர்ந்த பொருட்களில் எதையும் எடுக்கவில்லை. தாய், தந்தையரின் அன்புக்காகவே அவன் ஏங்கினான்.

அதனால் அச்சிறுவன், அரசரை பார்த்து, எனக்கு தாய், தந்தை இல்லை. நான் அனாதை. அதனால் உங்களை ஒரு முறை தந்தையே என்று அழைக்கலாமா? என்று கேட்டான். சிறுவனின் ஏக்கத்தை புரிந்து கொண்ட அரசர், அந்த சிறுவனை கட்டியணைத்து, முத்தமிட்டு அன்பு காட்டினார். அவனை மகனாக ஏற்றுக்கொண்டார். பிற்காலத்தில் அச்சிறுவனே அந்த ராஜ்ஜியத்துக்கு அரசனானான்.

விவிலியத்தில் இருவேறுபட்ட மனநிலை கொண்ட கதாபாத்திரங்கள் உண்டு. ஒன்று, மதலேன் மதியாள். மற்றொன்று, யூதாஸ் இஸ்காரியோத்து. அதில் முதலாமவர், இயேசுவின் காலடியில் அமர்ந்து தன் பாவ வாழ்விற்கு பரிகாரமாக எலாமிச்சை என்னும் விலையுயர்ந்த நறுமண தைலத்தை இயேசுவின் கால்களில் ஊற்றி தன் கூந்தலால் துடைத்து மோட்சத்தை தேடிக்கொண்டார். இவர் நன்றியுடையவர்.

மற்றொருவரான யூதாஸ் நன்றி கெட்டவர். 30 வெள்ளிக்காசுக்காக தன் குருவை காட்டிக்கொடுத்தவர். யூதாசு சம்பாதித்தது மரணம். நித்திய நரகம். இவர்களில் முதலாமவர் கடவுளையே சொந்தமாக்கி கொண்டார். நமது அன்றாட வாழ்வில் பணத்திற்கா? அல்லது நம்மை படைத்த கடவுளுக்கா? யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

வாழ்வில், செல்வத்தை கொண்டு ஏழை, எளிய முதியோர்கள், அனாதைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வது, அந்த கடவுளுக்கே செய்தது போன்ற நன்மையை தேடி தரும். எனவே, அத்தகைய அருள் வாழ்வு வாழ முயலுவோம். இந்த ஆண்டின் புனித வாரம் நம்மையும் புனிதமாக்கட்டும்.

அருட்பணி. அருமைசாமி, பங்குத்தந்தை,

என்.ஜி.ஓ.காலனி பங்கு, திண்டுக்கல். 

Similar News