ஆன்மிகம்

தேடி சென்று உதவுவோமா?

Published On 2018-04-17 11:09 IST   |   Update On 2018-04-17 11:09:00 IST
உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உள்ளங்கனிந்த அன்பு காட்டுங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உரோமையர் 12:10-13.
யூதர்கள் ஓய்வு நாள் சட்டத்தை யாரும் மீறக்கூடாது என்ற தங்கள் பக்கத்திலிருந்து தான் யோசித்தார்களே தவிர 38 ஆண்டுகளாக உடல் நலமற்றிருந்த ஒருவருக்கு புது வாழ்வு கிடைத்து இருக்கிறது என்ற அவன் பக்கம் இருந்து யோசிக்கவில்லை. ஆனால் இயேசுஅவனுடைய கஷ்டத்தை தனது கஷ்டமாக எண்ணி அவரை குணப்படுத்துகிறார். இயேசு குணப்படுத்திய இடம் பெத்சதா. இது குளத்தின் பெயர். இதனை பெதசஸ்தா என்றும் கூறுவர். பெத்சாய்தா என்றால் மீன்பிடிக்கும் வீடு என்பது பொருள்.

இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் உடல் நலமற்ற நோயாளி வித்தியாசமானவராகத் தென்படுகிறார்.

முதலாவதாக, இயேசு அவரிடம் தானே வலிய சென்று “நலம்பெற விரும்புகிறீரா? என்ற கேள்வியை கேட்டபோது ஆவலோடு, “ஆம்“ என்று சொல்லாமல் தன் கடந்த காலத்தைப் பற்றியும், தன் இயலாமையைப் பற்றியும் பேசி கொண்டிருக்கிறார். நம்மில் பலரும் இந்த நோயாளியை போல இருக்கிறோம். இறைமகன் இயேசு இன்று இப்போது நமக்கு குணம் தர தயாராக இருந்தாலும் நாமோ நம் இயலாமையையும், பலவீனங்களையும் குறித்தே அதிகம் சிந்திக்கிறோம். அவற்றையே வார்த்தைகள் மற்றும் கண்ணீர் வழியாக இறைவன் பாதத்தில் கொட்டுகிறோம்.

இரண்டாவதாக 38 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கிடந்த தன்னை குணமாக்கியவர் யார் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. எனவே தான் யூதர்கள் குணம் கொடுத்தவர் பற்றி கேட்ட போது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. நாமும் கூட இயேசுவை தேடி வந்து அவரிடமிருந்து உடல் உள்ள நலன்களை பெற்று கொண்டாலும் அவரை பற்றிய அறிவிலும், ஞானத்திலும் வளர ஆர்வம் காட்டுவதில்லை. நன்றி சொல்ல கூட மறந்து விடுகிறோம். குணம் தருபவராக மட்டுமே இயேசுவை அணுகுகிறோம்.

மூன்றாவதாக மீண்டும் இயேசு அவரை சந்தித்து தான் யாரென்று வெளிப்படுத்திய போது அவரை பின்பற்றுவதை விட்டு அவரை யூதர்களுக்குக் காட்டிக்கொடுக்கிறார். நம் வாழ்க்கையிலும் சிலநேரங்களில் இயேசுவிடமிருந்து நன்மைகள் பெற்றாலும், வாழ்க்கையில் துயரங்கள் வரும் போது அவரை விட்டு புற தெய்வங்களை நாடி செல்ல தயங்குவதில்லை, வேறுவகையில் சொல்ல போனால் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய தயங்குவதில்லை. இந்த நிலை மாறவேண்டும்.

வழக்கமாக இயேசுவை தேடித்தான் நோயாளிகள் செல்வார்கள். மேலும் அவர்களை குணமாக்குவதற்கு முன்பாக இயேசு அவர்களது விசுவாசத்தைக் கேட்டு தெரிந்துகொள்வார். ஆனால் 38 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தவர் இயேசுவை பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை. அவரது உதவியை நாடவுமில்லை. ஆனால் இயேசுவே தானாக முன்சென்று குணம் பெற விரும்புகிறீரா? ஏன்று சொல்லி குணம் கொடுக்கிறார். தேவையிலிருப்பவர்கள் நம்மிடம் ஒன்றும் கேட்கவில்லையே என்று சும்மா இருந்துவிடமால் நாமாகவே முன்வந்து நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும். “உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உள்ளங்கனிந்த அன்பு காட்டுங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உரோமையர் 12:10-13.

ஆல்பட் புஷ்பராஜ், பங்குத்தந்தை,

புனித அன்னாள் ஆலயம், கிழநெடுவாய்.

Similar News