ஆன்மிகம்

சிலுவை அது அன்பின் சுமை

Published On 2018-04-12 09:06 IST   |   Update On 2018-04-12 09:06:00 IST
அன்பு உள்ள இடத்தில் மலையளவு சுமையும், கழுத்தில் தொங்கும் மாலையளவு சுமையாகும் என்பார்கள். இன்று பெரிய வெள்ளி. உண்மையான அன்பை உலகம் அனுபவித்த தினம்.
அன்பு உள்ள இடத்தில் மலையளவு சுமையும், கழுத்தில் தொங்கும் மாலையளவு சுமையாகும் என்பார்கள். இன்று பெரிய வெள்ளி. உண்மையான அன்பை உலகம் அனுபவித்த தினம்.

இரண்டாம் உலகப்போரின் போது ஒரு சித்ரவதை முகாமில் மூன்று யூதர்களை தூக்கிலிட்டனர். அவர்களில் இருவர் வயதானவர்கள். தூக்கிலிட்டதும் அவர்கள் உடனே இறந்து விட்டனர். ஆனால் மூன்றாவது நபர் ஒரு இளைஞர். அவரை தூக்கிலிட்டதும் உடனே அவர் இறந்து போகாமல், நீண்ட நேரம் தூக்கில் தொங்கி வேதனையால் துடித்து கொண்டிருந்தார்.

இந்த பரிதாப காட்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் மனம் வருந்தி, தன் அருகில் இருந்தவரை பார்த்து, எங்கே கடவுள்? கடவுள் எங்கே? என்று கேட்டார். அதற்கு அருகில் இருந்தவர், ‘அவர் தான் அந்த தூக்கு கயிற்றில் தொங்குகிறார்‘ என்றார். ஆக, இயேசு, சிலுவையை அன்பின் சுமையாக ஏற்று கொண்டதால், தமது இறப்பின் மூலம், கடவுளே மனிதரின் துன்பத்தில் நேரடியாக, முழுமையாக பங்கேற்றார் என்பதை காட்டுகிறது.

திருத்தூதர் பவுலுடன் இணைந்து நாமும், ‘கிறிஸ்து என் மீது அன்பு கூர்ந்தார். எனக்காக ஒப்புவித்தார்‘ (கலா 2:20) என்று நன்றி பெருக்குடன் கூற வேண்டும். ‘கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர வேண்டும்‘. (எபே 3:18-19) கிறிஸ்துவினுடைய அன்பிலிருந்து நம்மை பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மை பிரிக்க முடியும்?‘ (உரோ 8:35) என்று சூளுரைக்க வேண்டும்.

சிலுவை என்னும் அன்பின் சுமையால் கடவுள் மனிதரின் துன்பத்தில் தன்னை இணைத்துக்கொண்டு துன்புற்றார். மனிதர் சிந்தும் கண்ணீர் கடவுளுடைய கண்ணீர். மனிதரின் சாவு கடவுளின் சாவு என்பதை உணர்ந்தவர்களால் இந்தப்புனித நாளில் கிறிஸ்துவின் சிலுவை அன்பை சுவைத்து, அந்த அன்பை பிறரில் விதைத்து, அதை பன்மடங்கு அறுவடை செய்ய இயலும். அதற்கு நாம் முயற்சிப்போம்.

அருட்பணி. ஆ.ஜேம்ஸ் அந்தோணிதாஸ், பங்குத்தந்தை, காமலாபுரம்.

Similar News