ஆன்மிகம்

புதிய விடியலுக்கான அமைதி

Published On 2018-04-09 09:14 IST   |   Update On 2018-04-09 09:14:00 IST
ஆண்டவரின் வெற்றி, சாவு இல்லாமல் இல்லை. மாறாக சாவுக்குள்தான் அவரின் வெற்றி இருக்கிறது. புனித சனி புதிய விடியலுக்காய் காத்திருக்கும் அமைதியின் நாளாகும்.
திருஅவை கொண்டாடும் புனித சனிக்கிழமையை பெரும் பாலானவர்கள் சிறப்பான நாளாக கருதாமல் இருப்பதுண்டு. புனித வெள்ளிக்கும், உயிர்ப்பு ஞாயிறுக்கும் இடையே வருகின்ற புனித சனியின் உண்மையான நிலையை நாம் புரிந்து கொள்வது அவசியமாகிறது. சிலுவை மரணம் என்ற கொடிய வேதனைக்கு பின், உயிர்ப்பு என்ற மகிமையின் நிலைக்கு முன் உள்ள முக்கியமான நாள்.

புனித வெள்ளியன்று நிகழ்ந்து முடிந்த சிலுவைப்பாடுகளுக்கும், வர இருக்கின்ற உயிர்ப்பின் மகிமைக்கும் இடையே உள்ள புரியாத ஒரு அமைதி. நடந்தது நடந்து விட்டது, வரவிருப்பது இன்னும் வரவில்லை என்ற இரு வேறுபட்ட நிலைகளுக்கு இடைப்பட்ட ஒரு புதிரான நிலை. வெள்ளிக்கிழமையின் வேதனையை நினைத்து அழுவதா அல்லது உயிர்ப்பின் வருகையை நினைத்து மகிழ்ந்து இருப்பதா என்ற ஒரு இனம் புரியாத அமைதியில் நாம் இருக்கும் நாள்.

புனித சனியின் அமைதி நமக்கு பல்வேறு செய்திகளை சொல்கிறது. ஆண்டவர் இயேசுவின் மரணம் சீடர்களின் வாழ்விலும், உறவை இழந்த நிலை நம்பிக்்கையை, கனவுகளை இழந்த நிலையை உருவாக்கியது. அவர்கள் உயிர்ப்பு ஞாயிறு ஒன்று இருப்பதை அறியவில்லை. புனித வெள்ளியிலிருந்து, ஞாயிறு நோக்கி நகர முடியவில்லை.

எனவே அவர்கள் கல்லறை நோக்கி செல்கிறார்கள். புனித சனிக்கிழமை அமைதியும், அசையாநிலையும் கொண்டது. அவரைப் பற்றிய நினைவுகளையும், அவர் கொடுத்த நம்பிக்கையையும் கொண்டது. கல்லறையின் அமைதி புதிய விடியலுக்கானது. நம்பிக்கை அறிக்கையில் நாம் அறிக்கையிடுவது போல, அவர் பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

அங்கு அவர் சாவின் அடிமைத்தனத்தை உடைக்கிறார். புனித சனி, துன்பத்தின் இடத்தில் மகிழ்ச்சியை வைக்கும் நாள் அல்ல. அது துன்பத்தையே மகிழ்ச்சியாய் மாற்றிக்கொள்ளும் நாள், கல்லறை கருவறையாக மாறும் நாள், வாழ்க்கை முடியும் இடத்தில் புதிய வாழ்வு தொடங்கும் நாள். ஆண்டவரின் வெற்றி, சாவு இல்லாமல் இல்லை. மாறாக சாவுக்குள்தான் அவரின் வெற்றி இருக்கிறது. புனித சனி புதிய விடியலுக்காய் காத்திருக்கும் அமைதியின் நாளாகும்.

- தேவதாஸ், பங்குத்தந்தை, தூய அலங்கார அன்னை பேராலயம், குடந்தை.

Similar News