ஆன்மிகம்

பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வரும் புனித அந்திரேயா ஆலயத்துக்கு இன்று 200 வயது

Published On 2018-04-06 07:58 IST   |   Update On 2018-04-06 07:58:00 IST
1818-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்ட தொடங்கிய புனித அந்திரேயா ஆலயத்துக்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) 200 வயது ஆகிறது. பழமை மாறாமல் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
புனித அந்திரேயா ஆலயம் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை அருகில் உள்ளது. இந்த ஆலயம் 1818-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, 1821-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு ஆலயம் கட்ட தொடங்கிய 200-வது ஆண்டு நினைவு நாள் இன்று(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதற்காக இன்று இரவு 7 மணிக்கு ஆலயத்தில், நன்றி தெரிவிக்கும் ஆராதனை நடைபெற இருக்கிறது. வருகிற 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் நன்றி தெரிவிக்கும் ஆராதனையுடன், ஆலயம் கட்டத்தொடங்கியது எப்படி? ஆலயத்தின் கட்டிட சிறப்பம்சங்கள் என்ன? என்பது அடங்கிய புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது.

அடிக்கல் நாட்டப்பட்டதன் 200-வது ஆண்டில் வீறுநடைபோடும் ஆலயத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அந்த ஆலயத்தின் பாதிரியார் ஐசக் ஜான்சன் கூறியதாவது:-

புனித அந்திரேயா ஆலயம் கட்ட இந்த இடத்தை முதலில் தேர்வு செய்த போது, வெறும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. அதை அகற்றுவதற்காக 150 இடங்களில் கிணறுபோல் 14 அடி முதல் 50 அடி வரை ஆழமாக குழி தோண்டி அதில் அந்த சேறும், சகதி மற்றும் நீர் சேகரித்து, அதில் ஜல்லிக்கல், கூழாங்கல், மணல் மற்றும் செங்கல் ஆகியவற்றை கொண்டு நிரப்பி அடித்தளம் தயார் ஆனது.

அதன்பின்னர், ஆலயத்தின் கட்டிடத்தை கட்டிடக்கலை நிபுணர் தாமஸ்டி ஹவிலாண்ட், தலைமை என்ஜினீயர் கொலனல் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியால் நேர்த்தியாக கட்டப்பட்டது. கட்டிடத்துக்கான பணிகளில் சேத்துப்பட்டு பகுதியில் இருந்து நம்முடைய மக்கள் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தில் பிரசித்தி பெற்ற ஆலய கட்டிட வடிவமைப்பான ‘நியோ கிளாசிக்கல் சர்ச்சஸ்’ கட்டமைப்பில் தான் கட்டப்பட்டு இருக்கிறது. வட்டவடிவில் ஆலயத்தின் நடுப்பகுதி இருக்கும். அதன் குவிமாடத்தில் வட்டவடிவில், மொட்டை மாடியில் இருந்து வானத்தை பார்த்தால் எப்படி இருக்குமோ? அதே தோற்றத்தில் நீல நிறம் மற்றும் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன.

196 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் பொலிவு மாறாமல் அதே வண்ணத்தில் நீடிப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நீலநிற வண்ணம் ஸ்காட்லாந்தில் ‘லேபிஸ் லசுலி’ என்ற நீலநிறத்திலான கற்களை நொறுக்கி பெயிண்டாக மாற்றி இதில் பூசப்பட்டு இருக்கிறது. அதன் ஆயுட்காலம் ஏறக்குறைய 500 ஆண்டுகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

எந்திரத்தின் உதவி இல்லாமல் ஆலயத்தின் நடுப்பகுதியில் முற்றத்தை தாங்கி பிடிக்கும் பிரமாண்டமான 16 தூண்கள் பிரமிக்கத்தக்க வகையில் கட்டப்பட்டு இருக்கிறது. இதையும் நம் நாட்டு கலைஞர்களை கொண்டே கட்டியிருப்பது மேலும் சிறப்பம்சமாகும். 3 ஆண்டுகளில் கட்டுமான பணிகளை சிரமத்துடன் கலைநயமாக வடிவமைத்து முடித்து, 1821-ம் ஆண்டு ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு பணிகளை அப்போது முடித்து இருக்கின்றனர்.

உள்ளே இருக்கும் மர வேலைப்பாடுகளுக்கும் இதே வயது தான் ஆகிறது. இதுவரை ஆலயத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இன்றளவும் பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. 166½ அடி உயர கோபுரம் ஆலயத்தின் நுழைவுப்பகுதியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 500 குடும்பத்தினர் ஆலயத்தில் உறுப்பினர்களாக இப்போது இருக்கிறார்கள். அப்போதில் இருந்து இப்போது வரை ஸ்காட்லாந்து முறைப்படியான ஆராதனையே நடைபெற்று வருகிறது.

அடிக்கல் நாட்டிய 200-வது ஆண்டு நினைவு நாள் இப்போது கொண்டாடப்படுகிறது. அடுத்ததாக ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதன் 200-வது ஆண்டு நினைவு விழா வருகிற 2021-ம் ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News