ஆன்மிகம்

வேண்டும் வரம் அருளும் மின்னல் மாதா

Published On 2018-04-04 04:55 GMT   |   Update On 2018-04-04 04:55 GMT
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் மின்னல் மாதா குடிகொண்டுள்ளார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது, தன்னூத்து கிராமம். இங்கு சேர்ந்தமரம் பங்குக்கு உட்பட்ட புனித அருளானந்தர் ஆலயம் இருக்கிறது. இங்குதான் மின்னல் மாதா குடிகொண்டுள்ளார். இந்தப் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது புனித அருளானந்தர் ஆலய கோபுரத்தின் இரண்டாவது அடுக்கில் நின்ற நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மாதா சிலை, மின்னல் தாக்கியதில் கீழே விழுந்தது.

அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தும், மாதா சிலையில் ஒரு சிறிய சேதம் கூட ஏற்படவில்லை. மேலும் அந்தச் சிலையானது, கோபுரத்தின் மேலே எப்படி நின்ற நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததோ, அதே போல நின்ற நிலையிலேயே தரையில் வந்து நின்றது தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தச் செய்தியை அறிந்ததும் சுற்றுவட்டார பொதுமக்கள் பலரும் ஆலயத்திற்கு கூட்டம் கூட்டமாக வந்து, அந்த மாதாவை தரிசனம் செய்தனர். அன்று முதல் இந்தத் திருத்தலம், மின்னல் மாதா ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாதாவானவர், வானத்தில் இருந்து பூலோகத்தில் இருக்கும் தன் மக்களை காக்க, தரையிறங்கி வந்ததாகவே அனைவரும் கருதுகின்றனர். தற்போது அந்த மின்னல் மாதா சிலை, ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.



மின்னல் மாதாவின் அற்புதத்தை அறிந்து, தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும், பலர் இங்கு வந்து மாதாவை தரிசித்துச் செல்கின்றனர். பல மாநில இறைமக்கள், தங்களில் பங்குத் தந்தையோடு இங்கு வந்து அவரவர் மொழிகளில் மாதாவை பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.

இதுதவிர தன்னூத்துப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் ஜாதி, மத, இன பாடுபாடு இல்லாமல் இந்த அன்னையிடம் தங்களது கோரிக்கைகளை வைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை ஒரு தாளில் எழுதி, மாதாவின் பாதங்களில் சமர்ப்பிக் கிறார்கள். அவர்கள் மனதில் நினைத்து வேண்டிக்கொண்ட காரியம் நிறைவேறியதும், அதற்கு நன்றிக் கடிதம் ஒன்றையும் எழுதி மாதாவிடம் சமர்ப்பணம் செய்கிறார்கள். இப்படிக் குவிந்த நன்றிக் கடிதங்கள் அனைத்தும், ஆலயத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆலயத்திற்கு வருபவர்களில் அதிகமானவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டி மாதாவின் அருகில் இருக்கும் வேப்பமரத்தில் தொட்டில் கட்டிச் செல்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்தபின் இங்கு வந்து நன்றியுடன் காணிக்கை செலுத்துகின்றனர். இதுவே இந்த ஆலயத்தின் சிறப்பாகும். வார வாரம் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு இந்த ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனை நடக்கிறது.

இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அசன விருந்து வழங்கப்படுகிறது. இதற்கான பொருட்கள் அனைத்தும் பொதுமக்களே மனமுவந்து அளிக்கிறார்கள். மாதத்தின் முதல் சனிக்கிழமை இங்கு திரளான பக்தர்கள் இறைவழிபாட்டிற்காக கூடுகிறார்கள். இந்த ஆலயத்தின் பங்குத் தந்தையாக எஸ்.ஏ.அந்தோணிசாமி அடிகளார் உள்ளார்.
Tags:    

Similar News