ஆன்மிகம்

கிறிஸ்துவின் மரணத்தால் புனிதம் அடைந்த வெள்ளி

Published On 2018-03-30 10:17 IST   |   Update On 2018-03-30 10:17:00 IST
இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் துறந்ததால் புனிதமான இந்த வெள்ளி, நமது சமூகத்தில் நிலவும் அநீதிகளை முடிவுக்கு கொண்டு வர அடித்தளம் அமைக்கட்டும்!
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்கள் இன்று (30ந்தேதி) புனித வெள்ளியைக் கடைபிடிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிலுவை மரத்தில் ஒரு படுகொலை நிகழ்ந்த நாள், புனிதமானதாக அனுசரிக்கப்படுவது ஏன் என்பது குறித்து இங்கு காண்போம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் வாழ்ந்த இயேசு கிறிஸ்து என்ற தெய்வீகப் புரட்சியாளரின் வாழ்வே வரலாற்றை கி.மு. - கி.பி. என்று இரண்டாக கூறு போட்டது. இயேசு கிறிஸ்து அரசியல் புரட்சியோ, சமயப் புரட்சியோ செய்ததால் கொலை செய்யப்படவில்லை.

உலகில் நிலவிய மூடப் பழக்கங்களுக்கும், சமூக அநீதிகளுக்கும் முடிவு கட்ட குரல் கொடுத்ததே அவர் செய்த புரட்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் நலமான வாழ்வுக்காக குரல் கொடுத்த இயேசுவால், தங்கள் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற ஆதிக்க சக்திகளின் எண்ணமே அவரது சிலுவை மரணத்துக்கு காரணமானது.

தாம் விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்தவர் என்று போதித்த இயேசு, தம்மை ‘இறைமகன்’ என்றும் கூறினார். தமது வார்த்தைகள் உண்மையானவை என்பதை, தமது அற்புதச் செயல்களால் நிரூபித்தார். அவர், தண்ணீரை திராட்சை ரசமாக்கினார், புயலை அடக்கினார், கடல் மீது நடந்தார். பார்வையற்றவர் பார்க்கவும், செவித்திறன் இல்லாதோர் கேட்கவும், கால் ஊனமுற்றோர் நடக்கவும், தொழுநோயாளர் நலமடையவும், இறந்தோர் உயிர்த்தெழவும் செய்தார்.

இயேசு கிறிஸ்து செய்த எண்ணற்ற அற்புதங்கள், திரளான மக்களை அவர் பக்கம் ஈர்த்தன. அவரது போதனைகள், வழிதவறிய மக்களை மனம் திருப்பின, பகைவரை மன்னிக்கச் செய்தன, ஏழைகளுக்கு இரக்கம் காட்டச் செய்தன, உணவையும் உடைமைகளையும் பிறரோடு பகிரச் செய்தன, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கின.

சமத்துவம், பொதுவுடைமை என இன்று மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு முதலில் அடித்தளம் அமைத்தவர் இயேசு கிறிஸ்துவே. ஒருவர் ஏழையாக இருப்பது அவரது பாவத்தின் காரணமாகவே என்று போதித்த யூத சமூகத்தில், ஏழைகளை உருவாக்கியவர்கள் பணக்காரர்களே என்றும், அவர்கள் மோட்சத்தில் நுழைவது கடினம் என்றும் இயேசு கற்பித்தார்.

மனிதரிடையே கடவுள் பாகுபாடு பார்ப்பதில்லை, மனிதர்கள் அனைவரும் அவர் முன்பு சமமானவர்களே, அவர் நல்லோர் மீதும் தீயோர் மீதும் மழை பொழியச் செய்கிறார் என்று போதித்தவர் இயேசு. பாவிகளையே தாம் தேடி வந்ததாக கூறிய அவர், பாவிகளின் மனமாற்றம் விண்ணகத்தில் பெரும் மகிழ்ச்சியை உருவாக்குகிறது என்று எடுத்துரைத்தார்.

எருசலேமில் இருந்த யூத சமயத் தலைவர்கள், ரோம பேரரசின் அடியாட்களாக செயல்பட்டு பதவி சுகத்தை அனுபவித்தனர், மதக் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மக்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். அவர்களது செயல்பாடுகள், வறுமையில் வாடியோரை இன்னும் ஏழைகளாகவும், செல்வம் படைத்தோரை இன்னும் பணக்காரர்களாகவும் மாற்றின.

இதனால், வசதியானவர்கள் யூத சமய குருக்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டு, ஏழைகளை வாட்டி வதைத்து வந்தனர். இத்தகைய ஆதிக்க சக்தியினருக்கு, இயேசுவின் போதனைகள் பெரும் சவாலாக அமைந்தன. ஆகவே, அவரை கொலை செய்வதே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வழி வகுக்கும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

அக்காலத்து பாலஸ்தீன் நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் வாழ்ந்த கலிலேயாவில் தொடங்கிய இயேசுவின் புரட்சி பணி, ஆதிக்கம் செலுத்துவோர் பரவிக் கிடந்த எருசலேம் நோக்கி நகர்ந்தது. கலிலேயாவில் போதனை செய்து வந்தது வரை இயேசுவை ஆதிக்க சக்தியினர் கண்டு கொள்ளவில்லை. அவரது பணி யூதேயாவில் தாக்கத்தை ஏற்படுத்தி, எருசலேமில் வாழ்ந்த மத குருக்களுக்கும் செல்வந்தர்களுக்கும் தொந்தரவாக மாறிய வேளையில் அவரை கொலை செய்யும் முடிவுக்கு அவர்கள் வந்தனர். ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் யூத தலைமைச் சங்கத்துக்கு இல்லை என்பதால், ரோமானிய ஆளுநர் பிலாத்துவின் முன்பு இறைமகன் இயேசு முன்னிறுத்தப்பட்டார்.

யூத தலைமைச் சங்கமே இயேசுவுக்கு மரணத் தீர்ப்பு எழுதி விட்டாலும், அதை நிறைவேற்றும் அதிகாரம் பிலாத்துவிடம் இருந்தது. இயேசு குற்றமற்றவர் என்று அறிந்த பிலாத்து, அவரை விடுவிக்க வழி தேடினார். ஆனால், அவரை விடுவித்தால் கலவரம் வெடிக்கும் என்றும், பிலாத்து தமது பதவியை இழக்க நேரிடும் என்றும் ஆதிக்க சக்தியினர் மிரட்டல் விடுத்தனர்.

அவர்களின் மிரட்டலுக்கு பணிந்த பிலாத்து, இயேசுவை சிலுவை மரணத்துக்கு கையளித்தார். சிலுவை என்ற கழு மரத்தில் தாம் உயிர் துறப்பது கடவுளின் திட்டம் என்று முன்னரே தம் சீடர்களுக்கு அறிவித்திருந்த இயேசு, தந்தையாம் கடவுளை மாட்சிப்படுத்த சிலுவையைத் தம் தோள்களில் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

கல்வாரி மலை நோக்கி சிலுவையைச் சுமந்து சென்ற இயேசு கிறிஸ்து, இரு கள்வர்களுக்கு நடுவில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். உண்மையை அறிவிக்கவே தாம் விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்ததாக பிலாத்துவுக்கு பதிலளித்த இயேசு, உண்மைக்கு சான்று பகருமாறு சிலுவை மரணத்துக்கு தம்மையே கையளித்தார். உண்மையா? அது என்ன? என்று கேட்ட பிலாத்துவுக்கு இயேசு பதில் கொடுக்கவில்லை. ஆனால், அதற்கான பதில் நம் அனைவருக்கும் தெரியும். ‘கடவுள் முன்னிலையில் மனிதர் அனைவரும் சமம்’ என்ற உண்மையை நிலைநாட்டவே இறைமகன் இயேசு தம் உயிரை பலியாகக் கொடுத்தார். இந்த உண்மை ஏற்கப்படும் இடத்தில் இயேசு கிறிஸ்து கொண்டு வந்த மீட்பு செயலாற்றுகிறது.

எங்கெல்லாம் மனித மாண்புக்கு அச்சுறுத்தல் எழுகிறதோ, மனித உரிமைகள் மீறப்படுகிறதோ, ஏற்றத் தாழ்வுகள் தொடர்கிறதோ, அடக்குமுறைகள் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் இயேசு கிறிஸ்து கொண்டு வந்த மீட்பு தேவைப்படுகிறது. இயேசுவின் போதனைகளுக்கு ஏற்ப சமத்துவ பொதுவுடைமை சமூகத்தை உருவாக்கி வாழ்ந்த முதல் கிறிஸ்தவர்கள், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடியும் வரை ஆயிரக்கணக்கில் ரோம பேரரசால் படுகொலை செய்யப்பட்டனர். இருப்பினும், என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தம் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்தொடரட்டும் என்ற இயேசுவின் வார்த்தையில் அவர்கள் நிலைத்திருந்ததால், கிறிஸ்தவம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது.

என் பெயரால் பிறர் உங்களை துன்புறுத்தும் வேளையில் நீங்கள் பேறுபெற்றோர் என்ற இயேசுவின் வாக்குறுதி, உயிர்ப்பை நோக்கிய நம்பிக்கைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. எங்கெல்லாம் அநீதி ஆதிக்கம் செலுத்துகிறதோ, அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட தம் சீடர்களை இயேசு அழைக்கிறார். உண்மையை நிலைநாட்ட இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் துறந்ததால் புனிதமான இந்த வெள்ளி, நமது சமூகத்தில் நிலவும் அநீதிகளை முடிவுக்கு கொண்டு வர அடித்தளம் அமைக்கட்டும்!

- டே. ஆக்னல் ஜோஸ்   

Similar News