ஆன்மிகம்

கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

Published On 2018-03-28 11:54 IST   |   Update On 2018-03-28 11:54:00 IST
பெரிய வியாழக்கிழமையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவதற்கு முன் தனது 12 சீடர்களுடன் இரவு உணவு உண்டார். அப்போது பந்தியில் அமர்ந்திருந்த இயேசு திடீரென எழுந்து தனது மேலாடையை கழற்றி வைத்துவிட்டு, இடுப்பில் ஒரு துண்டை கட்டிக்கொண்டார். பின்பு அன்பையும், சகோதரத்துவத்தையும், பணிவு வாழ்வையும் உணர்த்தும் வகையில் சீடர்களின் பாதங்களை நீரினால் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டினால் துடைத்தார்.

பிறருக்கு பணி செய்து வாழவேண்டும் என்று உணர்த்திய இயேசுவின் இந்த செயலை எடுத்துரைக்கும் வகையில், உலகம் முழுவதும் கத்தோலிக்க ஆலயங்களில் இறைமக்களின் பாதங்களை ஆயர்களும், அருட்பணியாளர்களும் கழுவி துடைக்கும் நிகழ்வு நடைபெறும்.

இந்த நிகழ்ச்சி தவக்காலத்தின் இறுதி வாரத்தில் வரும் வியாழக்கிழமை அன்று நடைபெறும். இந்த நாளை, ‘பெரிய வியாழன்’ என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு பெரிய வியாழன் நாளை (வியாழக்கிழமை) கடை பிடிக்கப்படுகிறது.

நாளை மாலையில் கத்தோலிக்க ஆலயங்களில் இறைமக்களின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலயத்தில் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. பங்குத்தந்தை ஆரோக்கிய ஷெல்லிரோஸ் கலந்து கொள்கிறார்.

மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் பாதம் கழுவும் நிகழ்ச்சியும், திருப்பலியும் நடக்கிறது.

மஞ்சாடி புனித சூசையப்பர் ஆலயத்தில் குழித்துறை மறைமாவட்டம் குருகுல முதல்வரும் பங்குத்தந்தையுமான ஜேசுரெத்தினம் தலைமையிலும், நட்டாலம் தேவசகாயம் பிள்ளை திருத்தலத்தில் அதிபர் ரசல்ராஜ் தலைமையிலும், கொல்வேல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஒய்ஸ்லின் சேவியர் தலைமையிலும், காஞ்சிரகோட்டில் பங்குத்தந்தை அருளப்பன் தலைமையிலும், பாலவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் திருத்துவபுரம் மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் புஷ்பராஜ் தலைமையிலும், பள்ளியாடி ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் பங்குத்தந்தை அனலின் தலைமையிலும்,

வெட்டுமணி புனித அந்தோணியார் திருத்தலத்தில் அதிபர் அருள் தேவதாசன் தலைமையிலும், மார்த்தாண்டம் புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை கிளட்டஸ் தலைமையிலும், திக்குறிச்சி ஆலயத்தில் பங்குத்தந்தை பால் ரிச்சர்ட் தலைமையிலும், மேல்புறம் ஆலயத்தில் பங்குத்தந்தை பிரைட் சிம்சராஜ் தலைமையிலும், இலவுவிளைஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ஜெயகொடி தலைமையிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சியும், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.

30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் ஆலயங்களில் திருச்சிலுவை ஆராதனையும், சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Similar News