ஆன்மிகம்
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்ற போது எடுத்தபடம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி

Published On 2018-03-26 09:04 IST   |   Update On 2018-03-26 09:04:00 IST
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஏசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில் துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜெயராஜ் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள், அருட்சகோதரர்கள் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று முழுவதும் வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

Similar News