ஆன்மிகம்

தவக்கால சிந்தனைகள் - உறவுகளை வலுப்படுத்துங்கள்

Published On 2018-03-19 09:12 IST   |   Update On 2018-03-19 09:12:00 IST
பகைமையால், பொறாமையால் மனத்தாங்கல்களால் விலகிப்போன உறவுகளை நமது இறங்கி வரும் செயல்பாடுகளால் மீண்டும் புதுப்பிப்போம்.
விண்ணும் மண்ணும் ஒன்றாக, மண்ணில் பேதங்கள், பிணக்குகள் களையப்பட, விண்ணில் இருந்து மண்ணுக்கு வந்தது மட்டுமின்றி மண்ணின் மைந்தனாக மாறியவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவர், விண்ணுக்கும் மண்ணுக்கும் ஓர் இணைப்பு பாலமாக இருந்தார். தந்தையாம் இறைவனின் அன்பை சுமந்து, சிலுவைச்சாவின் வழியே தன்னை உலகுக்கு அர்ப்பணித்து, அதன்மூலம் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி மக்களின் பாவங்களுக்காக குற்றமேதும் அறியாத அவர், சிலுவையிலே தன்னை பரிகார பலியாக ஒப்புக்கொடுத்தார். தந்தையாம் இறைவனுக்கும், அவரின் மக்களான மண்ணுலகில் உள்ள அனைவருக்கும் இணைப்பு பாலமாக சிலுவையிலே தொங்கி புது உறவின் அச்சாரமாக மாறினார். இதைத்தான் தவக்காலத்தில் நினைவு கூறப்படும் இயேசுவின் பாடுகள் நமக்கு உணர்த்துகிறது.

எல்லோரையும் ஒன்றாக்க இயேசு பட்ட பாடுகள், நம்மில் இருக்கும் பிளவுகளை களைந்து, விருப்பு, வெறுப்புகளை வேரறுத்து, உறவுக்கு முன்னுரிமை தரும் உன்னத வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் தவ முயற்சிகள், ஒறுத்தல்கள் ஆகியவை கடவுளோடு நமக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவது போல, நமக்கு அடுத்து இருப்பவர்களிடமும் உறவு நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆண்டவர் இயேசு, கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையை விட்டு சாதாரண மனிதரின் தன்மை கொண்டது போல, தலைவராக இருந்தும், தன் சீடர்களின் காலடிகளை அடிமை போல கழுவிட இறங்கி வந்தது போல, நாம் கொண்டிருக்கும் வறட்டு கவுரவங்களை, வீண் பெருமைகளை விட்டு இறங்கி வந்து உறவுகளை வலுப்படுத்துவோம்.

பகைமையால், பொறாமையால் மனத்தாங்கல்களால் விலகிப்போன உறவுகளை நமது இறங்கி வரும் செயல்பாடுகளால் மீண்டும் புதுப்பிப்போம். உறவுப்பாலங்களாக மாறுவோம்.

அருட்பணி. பால் பெனடிக்ட், சேசு சபை, திண்டுக்கல்.

Similar News