ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: அன்பினால் கிடைக்கும் அருள் வாழ்வு

Published On 2018-03-09 09:05 IST   |   Update On 2018-03-09 09:05:00 IST
ஆண்டவரை அன்பு செய், அடுத்தவரை அன்பு செய். இதுவே நற்செய்தியின் வழியாக இயேசு நமக்கு கொடுக்கும் புதிய கட்டளை.
‘கடவுள் உன்னை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதை நீ கணக்கிட முடியாது‘. அன்பு என்பது தெய்வமானது. அன்பு என்பது இன்பமானது. அன்பே அனைத்து வகையான அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் ஊற்றானது. ஆண்டவரை அன்பு செய், அடுத்தவரை அன்பு செய். இதுவே நற்செய்தியின் வழியாக இயேசு நமக்கு கொடுக்கும் புதிய கட்டளை.

தன்னை அன்பு செய்பவரால் மட்டுமே, தனக்கு அடுத்து இருப்பவரையும் அன்பு செய்ய முடியும். அன்பு செய்கின்ற உள்ளம், ஆண்டவன் வாழும் இல்லம். அன்புக்கு, அன்பு காட்டுபவன் மனிதன். அயலார்க்கு அன்பு காட்டுபவன் புனிதன். பகைவருக்கும் அன்பு காட்டுபவன் தெய்வம். அடுத்தவரில் ஆண்டவனை கண்டு அவர்களின் தேவையை நிறைவேற்றும் போது தான் கடவுளின் அன்பை சுவைக்க முடியும்; நட்பையும், பாரத்தையும் வெளிப்படுத்தி உறவை வளர்க்க முடியும்.

அன்பை, உடனிருப்பதாலும், உறுதியூட்டும் வார்த்தைகளாலும், நம்பிக்கையூட்டும் செயல்களாலும் வெளிப்படுத்தும் போது உயிர் தரும் அன்பிற்கு சாட்சியான இயேசுவின் உற்ற தோழர்களாக நாம் மாற முடியும்.

‘அன்பு செய்‘. புதிய சமூகத்தை உருவாக்க இயேசு கொடுத்த அன்பு கட்டளை இது. ஏற்றத்தாழ்வுகளை களைந்து கடவுளிடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் நம்மை பிரிக்கும் வேற்றுமைகளை வேரறுத்து, தன்னலமற்ற அன்பினால் கிடைக்கும் அருள் வாழ்வை இம்மண்ணில் சுவைக்க முயல்வோம்.

அன்பை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள் என்ற இறைவார்த்தை, நம் இதயத்தில் அன்பை ஊற்றெடுக்க செய்யட்டும். அன்பை ஆணிவேராகவும், அடித்தளமாகவும் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடருவோம். இறையருள் என்றும் நம்மோடு.

அருட்சகோதரி, பிரமிளா, சி.ஐ.சி., தாமரைப்பாடி, திண்டுக்கல்.

Similar News