ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: காணாமல் போன மகன்

Published On 2018-03-03 09:04 IST   |   Update On 2018-03-03 09:04:00 IST
தெரிந்தே முழுமன சுதந்திரத்துடன் பாவம் செய்து கடவுளை தொலைத்து விடுகின்றனர். இருப்பினும் செய்த குற்றத்திற்காக மனம் வருந்தி மீண்டும் கடவுளை நோக்கி வந்து விடுகிறார்கள்.
புல்டன் ஷீன் என்ற அமெரிக்க நாட்டு பேராயர் 4 விதமாக நாம் கடவுளை விட்டு பிரிந்து அவரை தொலைத்து விடுகிறோம் என்று கூறுகிறார். முதலாவதாக காணாமல் போன நாணயத்திற்கு ஒப்பானவர்கள். தங்களது இயலாமையால் பாவம் செய்து விடுகிறார்கள். சிறுபிள்ளைகளாக ஒன்றும் விவரம் தெரியாத சூழ்நிலைகளில், பெற்றோர் களின் தவறான வழிகாட்டு தலால், பாவம் செய்து கடவுளை தொலைத்து விடுகிறார்கள்.

இரண்டாவதாக காணாமல் போன ஆட்டிற்கு ஒப்பானவர்கள். தங்களது அறியாமையால் பாவம் செய்துவிடுகிறார்கள். ஒரு செயல் பாவம் என்பதை உணராது பிறரின் தூண்டுதலால் கடவுளின் கட்டளைகளை மீறி அறியாமையால் பாவம் செய்து, கடவுளை தொலைத்துவிடுகிறார்கள். மூன்றாவதாக தனது தந்தையிட மிருந்து ஆஸ்தியின் பங்கை பிரித்து வாங்கி சென்று ஊதாரித்தனமாக செலவு செய்து எல்லாவற்றையும் அழித்துவிட்டு பின்பு மீண்டும் தந்தையிடம் வந்து தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்ட காணாமல் போன ஊதாரி இளைய மைந்தனை போன்றவர்கள்.

தெரிந்தே முழுமன சுதந்திரத்துடன் பாவம் செய்து கடவுளை தொலைத்து விடுகின்றனர். இருப்பினும் செய்த குற்றத்திற்காக மனம் வருந்தி மீண்டும் கடவுளை நோக்கி வந்து விடுகிறார்கள். மேற்சொல்லப்பட்ட இந்த மூன்று வகை மனிதர்களும் காணாமல் போனாலும் மீண்டும் கடவுளை தேடி வந்து மீட்பு பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நான்காவதாக தந்தையுடனேயே இருந்து அவரின் சொற்படி செய்து ஆனால் மன்னித்து தன்னுடைய இளைய சகோதரனை ஏற்றுக்கொள்ள முடியாத மூத்த மகனை போன்றவர்கள்.

பரிசேயர்கள், சதுர்சேயர்கள் போல வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக இறுதிவரை தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல், தங்களை உத்தமர்கள் என்று நியாயப்படுத்தி மற்றவர்களை தீர்ப்பிடும் நீதிபதிகளாய் கடவுளின் அருளை இழந்து மீட்பை பெற முடியாது வீழ்ந்து மடிவார்கள். ஆக மனமாற்றத்தின் காலமாம் தவக்காலத்தில் நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி, நான் காணாமல் போன இளைய மகனா அல்லது ஏற்றுக்கொள்ள மனமில்லாத மூத்தமகனா? என்று நாம் சிந்தனை செய்யவேண்டும்.

- சுந்தர், கப்புச்சின் சபை, சிவபுரம்.

Similar News