ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: தொண்டாற்றுவதே மகிழ்ச்சி

Published On 2018-02-28 08:19 IST   |   Update On 2018-02-28 08:19:00 IST
தவக்காலத்தில் நாமும் உண்மையான மகிழ்ச்சியை பணத்தில், பதவியில் தேடாமல் தொண்டாற்றுவதில், உதவி புரிவதில் நம்பிக்கையோடு ஏசு கிறிஸ்துவுக்காக ஏற்பதில் காண்போம்.
ஒரு ஊரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை 2 மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் அவன் விற்கவில்லை.

இப்போது அந்த வீடு அவன் கண்முன்னே எரிந்து கொண்டிருந்தது. நிறைய பேர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அந்த செல்வந்தன் என்ன செய்வது என்று தெரியாமல் கண் கலங்கிய படி நின்று கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய மூத்த மகன் வந்து அப்பா, நேற்றே இந்த வீட்டை 3 மடங்கு லாபத்திற்கு விற்று விட்டேன்.

இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்றான். இதனை கேட்டவுடன் செல்வந்தன் மகிழ்ச்சி அடைந்தான். இந்தநிலையில் அவனின் 2-வது மகன் வந்து தந்தையே நாங்கள் விற்ற வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கி உள்ளோம் என்றான். இப்போது வீட்டை வாங்கியவர் மீதி பணத்தை தருவாரா என்பது சந்தேகமே என்றான். இதை கேட்ட செல்வந்தன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து 3-வது மகன் ஓடி வந்தான். அவன், தந்தையே கவலை வேண்டாம்.

இந்த வீட்டை வாங்கிய மனிதர் மிகவும் நல்லவர். வீட்டை வாங்கியவர், இந்த வீடு தீப்பிடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசிய படியே முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று கூறினார் என்றான். இதைக்கேட்டவுடன் செல்வந்தன் மகிழ்ச்சி அடைந்தான். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடி, பாடினான். கண்ணீரும், சோகமும் அவனிடம் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். இங்கு எதுவுமே மாறிவிடவில்லை, அதே வீடு! அதே நெருப்பு! அதே இழப்பு! ஆனால் அவன் மனநிலையில் மட்டும் மாற்றம்.

உண்மையான மகிழ்ச்சி தொண்டு ஏற்பதில் அல்ல. தொண்டாற்றுவதில் தான். அதற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு நான் என்கிறார் ஏசு.

தவக்காலத்தில் நாமும் உண்மையான மகிழ்ச்சியை பணத்தில், பதவியில் தேடாமல் தொண்டாற்றுவதில், உதவி புரிவதில் நம்பிக்கையோடு ஏசு கிறிஸ்துவுக்காக ஏற்பதில் காண்போம்.

- ஆல்பர்ட் புஷ்பராஜ், பங்குத்தந்தை, புனித அன்னாள் ஆலயம், கீழ நெடுவாய்.

Similar News