ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: பேராசை வேண்டாம்

Published On 2018-02-27 09:33 IST   |   Update On 2018-02-27 09:33:00 IST
எவ்வகை பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள். மிகுதியான உடைகளை கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது (லூக்கா 12:15).
மனிதர்களாகிய நாம் ஒரு இலக்கை அடைய ஆசைப்பட வேண்டும். செல்வம் சேர்க்க ஆசைப்பட வேண்டும். எவ்வகை முன்னேற்றத்திற்கும் முதல் படி ஆசைதான். ஆசை எது தொடர்புடையதாக இருந்தாலும் அதற்கும் அளவுண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதுவும் பணம், பதவி, புகழ் இவைகளை பொறுத்தமட்டில் ஆசை வேண்டும். இந்த ஆசை பேராசையாக மாறக்கூடாது.

அது பேராசையாக உருவெடுக்கும் நேரத்தில் அது தன்னுடைய உயிருக்கோ அல்லது பிறரின் உயிருக்கோ உலைவைக்கும் ஒரு பொடியாக மாறிவிடும். பேராசையின் தீய விளைவுகளை பற்றி ஏசுபிரான் கதை ஒன்று சொன்னார். செல்வன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வயல்கள் ஏராளம். அந்த ஆண்டு நல்ல மழை. எனவே விளைச்சல் அமோகம்.

தன்னுடைய களஞ்சியங்களை இடித்துப் பெரிதாக கட்டினான். அவைகளில் விளைந்த தானியங்களை கொட்டி மகிழ்ச்சியாக இருந்தான். தனக்குள் சொல்லிக் கொண்டான். நெஞ்சே நீ இளைப்பாறு. உண்டு, குடித்து, ஆனந்தப்படு என்று பெருமிதம் கொண்டான். தன் அருகே இருந்த வறியவர்களை பற்றி அவன் கவலைப்படவில்லை.

அவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினால் நல்லது தானே என்ற சிந்தனை அவனுக்கு சிறிதும் இல்லை. அவன் அளவுக்கு அதிகமாக உண்டு, குடித்து, ஆடி பாடியதால் இதயம் தாக்குப்பிடிக்காமல் வெடித்துப் போனது. பாவம், சேர்த்து வைத்த செல்வம் எங்கு போனதோ?

பேராசை அவனுடைய உயிருக்கே ஆபத்தாகிவிட்டது. எனவே பேராசையை தவிர்ப்போம். பிறர் அன்பு பேணுவோம்.

- குழந்தை,காணியிருப்பு.

Similar News