ஆன்மிகம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2018-02-23 08:24 IST   |   Update On 2018-02-23 08:24:00 IST
கச்சத்தீவு அந்தோணியார்ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பங்கேற்க ராமேசுவரத்தில் இருந்து 2,103 பேர் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தியாவிற்கும்-இலங்கைக்கும் இடையே நடுக் கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் இந்திய, இலங்கை இருநாட்டு மக்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி சிலுவை பாதை திருப்பலி மற்றும் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழாவின் 2-வது நாளான நாளை(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் நாள் திருவிழா திருப்பலி நடை பெற்று காலை 9 மணிக்கு திருவிழா நிறைவடையும்.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த 2,103 பேர் ராமேசுவரத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு படகுகளில் புறப்பட்டு பயணம் மேற்கொள்கின்றனர். காலைமுதல் ஒவ்வொரு படகாக புறப்பட்டு பகல் 12 மணிக்குள் 62 விசைப்படகுகள் கச்சத்தீவு செல்கின்றன.


கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு கொண்டுசெல்ல கொடிமரம் படகில் எடுத்துச்செல்லப்பட்ட காட்சி.

இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக தமிழக பக்தர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சுமார் 40 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடி மரமும், 4 அடி உயரம் கொண்ட அந்தோணியார் சொரூபம் ஒன்றும், நற் கருணைஆசீர் சிலுவையும் வழங்கப்பட உள்ளது. அதற்காக நேற்று கொடிமரம் படகில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு முதல்முறையாக தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. கச்சத்தீவு திருவிழாவையொட்டி பாக்ஜலசந்தி கடலான மண்டபம் முதல் தனுஷ்கோடி வரை உள்ள இந்திய கடல் பகுதியில் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான பெரிய ரோந்து கப்பல் ஒன்றும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 3 ஹோவர் கிராப்ட் கப்பலும், கடலோர போலீசாருக்கு சொந்தமான 2 பைபர் படகில் கடலோர போலீசாரும் நேற்று முதல் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவிழாவையொட்டி ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Similar News