ஆன்மிகம்
தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்த படம்.

தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2018-02-17 08:22 IST   |   Update On 2018-02-17 08:22:00 IST
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் தூய வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆகிய இரட்டை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 10-ம் நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் திருப்பலி மற்றும் சிலுவைபாதை, மறைசாட்சி நவநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலையில் ஜெபமாலை, புகழ்மாலையை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கினார். குழித்துறை மறைமாவட்ட முதன்மை செயலாளர் ரசல்ராஜ் அருளுரை ஆற்றினார். கொடியேற்றத்தின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டு சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. அதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் தேவசகாயம் மவுண்ட் பங்குத்தந்தை ஸ்டீபன், இணை பங்குத்தந்தை பிரைட், திருத்தொண்டர் சஜூ, பங்கு பேரவை துணைத்தலைவர் பயஸ்ராய், செயலாளர் தேவசகாயம், பொருளாளர் ஞானசேகர், துணை செயலாளர் கலையரசி, வட்டார துணைத்தலைவர் ஜேக்கப் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் சதீஸ்குமார் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவில் நற்கருணை பவனியும், 9-ம் நாள் திருவிழாவன்று நடைபெறும் மாலை ஆராதனையில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை பங்கேற்கிறார். தொடர்ந்து வாணவேடிக்கை மற்றும் தேர்பவனியும் நடைபெறுகிறது.

10-ம் நாள் திருவிழாவில் தேர்பவனி மற்றும் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாற்று நாடகம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

Similar News