ஆன்மிகம்

மனந்திரும்புவதால் அனுபவிக்கும் அற்புதம்

Published On 2018-01-26 09:54 IST   |   Update On 2018-01-26 09:54:00 IST
இந்த மனந்திரும்புதலுக்குப் பின்னர் பழைய பாவங்களும், பிறவிக் குணங்களும் பக்தனை அண்டவிடாமல், இயேசு வழிநடத்திச் செல்வதை அதிசய அற்புதமாக உணரலாம்.
பாவமன்னிப்பு, மனந்திரும்புதல் போன்ற பக்தி வழியைப்பற்றி எத்தனையோ கருத்துகளை எல்லாருமே தினமும் ஏதோ ஒரு வகையில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். பல போதனைகள் உள்ளத்தைத் தொடுவதில்லை. ஆனால் மனந்திரும்புதலுக்கென்று உள்ளத்தைத் தொடும் கருத்துகளை உணரும்போதும்கூட பலர் அதை ஏற்பதில்லை. பழைய வாழ்க்கையையே தொடர்கின்றனர்.

எனவே மனமாற்றம் அடையச் செய்வதற்காக மனிதனுக்கு துன்பம் சூழும் காலங்களை இறைவன் அனுமதிக்கிறார். அப்போது, நிம்மதியையும் விடுதலையையும் பெறுவதற்கான உண்மை போதனைகளை மனிதன் நாடித்தேடி ஓடுகிறான். ஆனால் மாற்று போதனைகளில் சிக்கிக்கொள்கிறான்.

பாவமன்னிப்பு, மனந்திரும்புதலைப் பற்றி யோவான் ஸ்நானன் கண்டித்து போதித்தான். அதைத் தொடர்ந்து இயேசு பல அற்புதங்களைச் செய்து பிரசங்கித்தார். அவர்களின் போதனையை அப்போது பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உலகத்தில் இயேசு வந்த உண்மை நோக்கத்தை அப்போ தலர்கள் விளக்கிய போதுதான், அந்த உண்மை போதனையை பலர் ஏற்றுக்கொண்டனர் (அப்.2:37,41).

இயேசுவின் நோக்கம் என்ன? மனிதனை பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்பச் செய்து, அவனுக்கு பக்திக்கான வழியைக்காட்டுவதற்காக தன் மகனான இயேசுவை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பினார். இது ஞானிகள், தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமே தெரியும்.

ஆனால், இயேசுவை அறியாத அனைத்து தரப்பு மக்களுக்கு அவரை அடையாளம் காட்ட வேண்டும். அடையாளத்துக்காகவே இயேசுவினால் பல அற்புதங்களை இறைவன் நடத்தினார் (அப்.2:23) என்று அப்போஸ்தலர்கள் போதித்தனர். இதுவே உண்மையான போதனை. இயேசு தங்களுடன் இருக்கிறார் என்பதை மக்கள் அறிவதற்காக சில அற்புதங் களையும் அப்போஸ்தலர்கள் செய்து காட்டி போதித்தனர்.

எத்தனையோ மந்திர, தந்திரங்கள் மூலமாக அற்புத அடையாளங்கள் நடந்தாலும், அந்த மந்திர, மாய, தந்திரங்களால் இறந்தவரை எழுப்ப முடியவில்லை; நோயை குணப்படுத்தவில்லை; இயற்கைச் சீற்றத்தை தடுக்கவும் இயலவில்லை. ஆனால் இயற்கையையும் மீறி அற்புதம் செய்து உலகத்தில் இயேசு தன்னை அடையாளம் காட்டினார்.

அந்த அடையாளங்களைக் கண்ட பிறகாவது மக்கள் தன்னை இறைமகன் என்று ஏற்றுக்கொண்டு, தான் சொன்னபடி பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்பிவிட வேண்டும் என்பதுதான் மனிதனைப்பற்றிய இயேசுவின் நோக்கம். அதற்காக இறைவனின் சித்தப்படி குறிப்பிட்டவர்களுக்கு இயேசு அற்புதங்களைச் செய்தார்.

அதுபோல, இன்றும் இயேசுவை அறியாத மக்களுக்கு அவரை அடையாளம் காட்டுவதற்குத்தான் பக்தர் களுக்கு வல்லமை தரப்பட்டிருக்கிறது. ஆனால் இயேசுவை பின்பற்றினால் அற்புதங்களை அடையலாம் என்று சுவிசேஷம் தலைகீழாக, சுயலாபங்களுக்காக போதிக்கப்படுகிறது. அதற்காக அற்புத அடையாளங்களே முக்கியப்படுத்தப்பட்டு வருகிறது.

இது உண்மையற்ற போதனை. உண்மையில்லாத போதனைகளால் மனிதனுக்கு மனமாற்றம் ஏற்படாது. அற்புதங்களை இயேசுவின் பிறப்புக்கு முந்தைய காலத்திலும் இறைவன் நடத்தியிருக்கிறார். எனவே இயேசுவை இதற்கென்று பிரத்யேகமாக உலகத்துக்கு அனுப்ப அவசியம் இல்லை. உலகத்துக்கு இயேசு வந்த நோக்கம், மனிதனின் மனந்திரும்புதலும், பாவம் நீங்கி அவன் பரிசுத்தமாகுதலும் தான்.

ஆனால் அதுபற்றிய போதனைகள் இரண்டாம் பட்சமாகிவிட்டன. அதிசயம், அற்புதமெல்லாம் உயிர் மீட்சி, வியாதி போன்ற சரீர ரீதியான மீட்புக்குத்தான் உதவும். ஆனால் மனமாற்றம் என்பது சரீர அற்புதமல்ல. அது மனிதன் எடுக்க வேண்டிய மனரீதியான முடிவு.

மனமாற்றம் என்றால் என்ன? பிறருக்கு எதிராக செய்த பாவங்களை, அவர்களிடமும், இறைவனிடமும் சொல்லி மன்னிப்பு கேட்பதும்; இனி சரீர மற்றும் மன ரீதியான பாவங்களையும், பிறவிக் குணங்களின்படியான குற்றங்களையும் செய்யமாட்டேன் என்று திருந்துவதே மனமாற்றமாகும். திருடியதையும், ஏமாற்றியதையும் உரியவரிடம் திருப்பித்தராதவன், மனந்திருந்தியவன் அல்ல.

இந்த மனந்திரும்புதலுக்குப் பின்னர் பழைய பாவங்களும், பிறவிக் குணங்களும் பக்தனை அண்டவிடாமல், இயேசு வழிநடத்திச் செல்வதை அதிசய அற்புதமாக உணரலாம். எனவே இயேசுவின் நோக்கமான பாவமன்னிப்பு, மனந்திரும்புதல் போன்ற இறைநீதிக்கு முன்னுரிமை அளிப்பதையே நாடுங்கள் (மத்.6:33).

Similar News