ஆன்மிகம்
இயேசுவை முன்னிலைப்படுத்தி வாழ்வோம்
தன்னை முன்னிலைப்படுத்தி வாழ விரும்பும் மனிதர்கள் மத்தியில், நல்லவர் ஒருவரை முன்னிலைப்படுத்தி அவர்வழி சென்று, அவரைப்பற்றி எடுத்துரைப்பவர் மாமனிதர்.
தன்னை முன்னிலைப்படுத்தி வாழ விரும்பும் மனிதர்கள் மத்தியில், நல்லவர் ஒருவரை முன்னிலைப்படுத்தி அவர்வழி சென்று, அவரைப்பற்றி எடுத்துரைப்பவர் மாமனிதர்.
அனைத்து வித துன்பங்களில் இருந்தும் தங்களை மீட்க ஒரு மீட்பர் வருவார் என யூதர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், யூதேயா மலைநாட்டில் அபியா வகுப்பை சேர்ந்த குரு செக்கரியாவுக்கும், அவரின் மனைவி எலிசபெத்-க்கும் மகனாக யோவான் தோன்றினார். யோவானின் பிறப்பு இறைதூதரால் முன்னறிவிக்கப்பட்டு கடவுளின் வல்லமையால் நிகழ்ந்த ஒன்று.
‘எவரால் மனித இனத்துக்கு நன்மை ஏற்படுகிறதோ அவரே மனிதரில் மிகச்சிறந்தவர்‘. மெசியாவின் வருகைக்காக மக்களின் மனங்களை செம்மைப்படுத்தி கொண்டிருந்து யோவானின் நற்செயல்களை கண்ட எருசலேமிலுள்ள யூதர்கள் அவரை ‘மெசியா‘ என எண்ணினர். அவரோ, தன்னை பின்பற்றி வந்த சீடரிடம், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தை போக்குபவர்“ (யோ 1:29) என இயேசுவை சுட்டிக்காட்டி சான்று பகர்ந்தார்.
பார்வை பெற்றவர்கள், தொழுநோய் நீங்க பெற்றவர்கள், கேட்கும் திறன் பெற்றோர், நோய்கள் பல நீங்கி நலம் பெற்றவர்கள், தீய சக்தியிலிருந்து விடுதலை பெற்றவர்கள், உளநோய் நீங்கி புது வாழ்வு பெற்றவர்கள் என எல்லோரும் இயேசுவே உண்மையான இறைமகன் என சான்று பகர்ந்தனர். இன்றைய நாட்களிலும், அன்பு வழியில், அமைதி வழியில் பிறருக்கு சேவையாற்றிய அன்னை தெரசாவின் வாழ்வு ஒரு சான்று வாழ்வு. வாய்மை எனும் ஆயுதத்தால் அகிம்சை வழியில் போராடிய மகாத்மா காந்தியின் வாழ்வு ஒரு சான்று வாழ்வு. ஏழைகளின் தோழனாக, அகதிகளின் அன்பனாக, அனைத்து மக்களின் விரும்பத்தக்க தலைவனாக வாழும் திருத்தந்தை பிரான்சிஸ்-ன் வாழ்வு ஒரு சான்று வாழ்வு.
தங்களது சொல்லாலும், செயலாலும், கிறிஸ்துவை போன்று வாழ்பவர்கள் கிறிஸ்துவின் உண்மை சான்றுகள். எனவே, சான்று வாழ்வு வாழ இந்த தவக்காலத்தில் முயற்சி எடுப்போம்.
அருட்சகோதரி. சாந்தாமேரி, மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல்.