ஆன்மிகம்
சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா தொடங்கியது
முக்கூடல் அருகே சிங்கம்பாறையில் புனித சின்னப்பர் ஆலய திருவிழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 8 மணிக்கு ஊர் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொண்ட சிறப்பு ஆராதனை நடந்தது. பின்னர் வானுயர பறக்கும் கொடிக்கு வழிபாடு செய்து ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து, ஆரவாரத்துடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து புறாக்கள் பறக்கவிடப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
விழா வருகிற 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், உணவு ஒன்றிப்பு விழா,
புதுநன்மை பெருவிழா, நற்கருணை பவனி, தேரடி திருப்பலி திருவிழா, கூட்டுத்திருப்பலி, தேர் பவனி, திருவிழா திருப்பலி மற்றும் தேர் பவனி திருமுழுக்கு திருப்பலி ஆகியன நடக்கிறது.
10-ம் திருநாளான 25-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு மாவட்ட அளவிலான 15-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடக்கிறது. இந்த போட்டி சிங்கம்பாறை புனித பவுல் மேல்நிலைப்பள்ளி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுத்திடலில் நடக்கிறது.
இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.20 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
போட்டிக்கான ஏற்பாடுகளை புனித சின்னப்பர் விளையாட்டு கழகம் மற்றும் இளைஞர் இயக்கம் இணைந்து செய்து வருகிறது.